மதுரை டூ பெங்களூர் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் சக்சஸ்! ரயில் எங்கெல்லாம் நிற்கும்! முழு விவரம்!
மதுரை: மதுரையிலிருந்து பெங்களூர் வரை இயக்கப்பட உள்ள, வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம், நேற்று நடந்து முடிந்தது. இந்த ரயில் சேவையை வரும் 20 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில், கட்டணம் எவ்வளவு, எத்தனை பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி பயணிகளிடையே எழுந்துள்ளது. இதோ அதற்கான முழு விவரம்..
மதுரை- பெங்களூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து நேற்று அதிகாலை 5.15 மணிக்கு மதுரையிலிருந்து வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. திண்டுக்கல்லுக்கு அதிகாலை 5.58 மணிக்கு சென்றது. காலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 7.10 மணிக்கு திருச்சிக்கும், பின்னர் 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 8.18 மணிக்கு கரூரை சென்றடைந்தது.

அங்கிருந்து 2 நிமிடங்கள் காத்திருப்புக்கு பிறகு 8.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூர் சென்றது. அது போல் பெங்களூரிலிருந்து அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்தது. ஆரஞ்ச் நிறத்தில் மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
எங்கெங்கு நிற்கும்: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக மதுரை- பெங்களூர் வந்தே பாரத் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் வந்தே பாரத் ரயில் மூலம் மதுரை, திருச்சி, சேலம் பயணிகளும் விரைவாக பெங்களூரு சென்றடைய முடியும். ரயில் சேவை தொடங்குவதற்கு முன்னதாகவே மதுரையிலிருந்து பெங்களூர் செல்ல ரயில் பயணிகளின் காத்திருப்பு பட்டியல் (waiting list) 400ஐ தாண்டியுள்ளது.
பயண நேரம்: மதுரை- பெங்களூருக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 மணி நேரம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத்தில் 6 மணி நேரம்தான் ஆகும். வந்தே பாரத் ரயில் முதலில் 16 பெட்டிகள் அல்லது 8 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. இதில் எக்சிகியூட்டிவ் மற்றும் சேர் கார் ஆகிய இரு பெட்டிகள் இருக்கும். 435 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரயிலில் பயணிக்க ஏசி சேர் காரில் 1300 ரூபாயும் எக்சிகியூட்டிவ் கோச்சில் 2300 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?: அதன்படி மதுரை- பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் வரும் 20ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதுவரை தமிழகத்தில் சென்னை டூ மைசூர், சென்னை -நெல்லை, சென்னை- நாகர்கோவில், சென்னை- விஜயவாடா, சென்னை- கோவை, கோவை டூ பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலிருந்து பெங்களூர் செல்ல போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் வந்தே பாரத் ரயில் மக்களுக்கு பயனளிக்கும் என தெரிகிறது.
மோடி துவக்கி வைக்கிறார்: ஜூன் 20ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை எழும்பூர்- நாகர்கோவில், மதுரை- பெங்களூர் ஆகிய இரு ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார். பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைப்பது மட்டுமல்லாமல் நாகர்கோவில் டவுன் ஜங்ஷன் கன்னியாகுமரி இடையே புதிய இரட்டை ரயில் பாதையையும் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களில் ஒன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைதான். இந்த மதுரைக்கு எந்த வித வளர்ச்சி திட்டங்களும் கிடைப்பதில்லை என அதிருப்தியில் மக்கள் இருக்கும் நிலையில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications