ஜல்லிக்கட்டில் காளையை அடக்க வந்த வெளிநாட்டவர்.. அனுமதி மறுத்த மருத்துவக் குழு.. காரணம் என்ன?
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக களமிறங்க விண்ணப்பித்திருந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆண்டனி என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் 54 வயதை எட்டியுள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக காளையை தழுவ மருத்துவக் குழுவினர் அனுமதி மறுத்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வருவார்கள். இம்முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருந்தார்.

இது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அலங்காநல்லூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதன்பின் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் அனுப்பப்பட்டு வந்தனர்.
முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2வது சுற்றில் களமிறங்கவிருந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் ஆண்டனிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் ஆண்டனியின் வயது 54ஆக இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக சென்னையில் வசித்து வரும் ஆண்டனிக்கு மாடுபிடி வீரராக களமிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆண்டனியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள, அவர் சிரித்து கொண்டே, நீங்கள் என்னை சுற்றி மைக்கை நீட்டுவது அரசியல்வாதியை போன்ற உணர்வை கொடுக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாமல் சென்றது ஏமாற்றம் தான். இதுகுறித்து அரசு அதிகாரிகளுடன் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடக்கும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க பல்வேறு விதிகளும் கட்டாயம் பின்பற்றப்பட்டு வருகிறது. இம்முறை மாடுபிடி வீரர்கள் அதிகளவில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். மது அருந்தி மாடு பிடிக்க வந்தவர்கள், வயது மூப்பு, மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் என்று பலரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications