"ஹைலி சீக்ரெட் மோஸ்ட் இம்பார்ட்டென்ட்"னு வந்த மெசேஜ்.. மோடியை சந்தித்தது ஏன்? பிடிஆர் விளக்கம்
மதுரை: மதுரையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது தொடர்பாக தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 முறை தமிழகம் வந்துச் சென்றுள்ளார். கடந்த மாத இறுதியில் பல்லடத்தில் நடந்த என் மண் என் மக்கள் நிறைவு விழா, தூத்துக்குடி, நெல்லையில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார்.

பல்லடம் வந்த அவர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாட்டில் கலந்து கொண்டார். இதற்காக அவர் மதுரையில் தங்கியிருந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க வருமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது.
அதிலும் highly secret most important என்ற தலைப்பில் தகவல் வந்ததை அடுத்து அடுத்த நாள் காலையில் பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல் ஆளாக சந்தித்ததாக தெரிகிறது. இந்த தகவலை பாஜகவினர் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே இதுகுறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசியல் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். புயல் வந்த போது மக்கள் பாதிப்படைந்திருந்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி வரவில்லை. அரசியல் மட்டும் செய்யாமல் அரசாங்க ரீதியில் கவனம் செலுத்தி அரசின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நியாயமாக பூர்த்தி செய்தால் நாங்களும் பாராட்டுவோம் என்றார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தீர்களா என நிருபர் கேட்டதற்கு பிரதமர் எப்போதெல்லாம் ஒரு இடத்திற்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் புரோட்டோக்கால் அடிப்படையில் மரியாதை செலுத்தும் வகையில் வரவேற்கவும் உதவி செய்வதும் அந்த மாநில அரசுடைய கடமை.
அந்த வகையில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்த பணிகளை செய்ய எனக்கு கட்டளை வந்தது. அதை நிறைவேற்றினேன். மற்றபடி எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலோ அல்லது அரசியலோ இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றொரு இடத்தில் அவர் பேட்டி அளித்திருந்தார்.
அவரை வரவேற்பதற்காக தமிழக அரசு எனக்கு இரு முறை புரோட்டோக்கால் கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்டோக்காலில் பிப் 27 ஆம் தேதி ஹோட்டலுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப். 27-ஆம் இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பும் உண்மை. அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன்.
பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்த விவரத்தின் நகல், பிரதமர் அலுவலகத்தில் தமிழக தலைமைச் செயலாளருக்கும் சென்று விடும். பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை பிரதமர் தேங்க்யூ பாய் என என்னை தோளில் தட்டிக் கொடுத்தார் என பிடிஆர் விளக்கமளித்திருந்தார். இந்த சந்திப்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications