"இந்தா வாறேன் அம்மானு போனான்" பலியான மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ்.. நெஞ்சை அடித்து கொண்டு கதறும் தாய்
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோதனை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதாகும் அரவிந்த்ராஜிற்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டில் காளை குத்தி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மகனை இழந்து தாய் அழுத சம்பவம் கிராமத்தில் காண்போரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஒன்பது சுற்றுகளாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 827 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 306 மாடுபிடி வீரர்கள் களத்தில் காளைகளோடு விளையாடினர். இதனிடையே 9 காளைகளை அடக்கி, அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருந்த அரவிந்த்ராஜ் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜ்
பாலமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் என்பவர் கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடியவர். ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு காளைகளை அடக்கி சிறந்த வீரராக திகழ்ந்தவர்.

வயிற்றில் குத்தி தூக்கி வீசிய காளை
மதுரையில் கூலி வேலை செய்து வரும் அரவிந்த்ராஜ், இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று 9 காளைகளை அடக்கியிருந்தார். தொடர்ந்து, அடுத்த காளையை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருந்த போது, திடீரென ஆக்ரோஷத்துடன் வெளிவந்த காளை, அரவிந்த்ராஜின் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது.

மாடுபிடி வீரர் பலி
இதனை சற்றும் எதிர்பாராத அரவிந்த்ராஜ், அங்கேயே சுருண்டு விழுந்தார். இதன் பின்னர் அரவிந்த்ராஜிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டார். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயார் வேதனை
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வு அரங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகனின் இறப்பு குறித்து தாய் தெய்வானை கூறுகையில், இந்தா.. வாறேன் அம்மா என கூறி சென்ற தனது மகன் இறந்து போயுள்ளான். 25 வயது முடிந்த நிலையில் திருமண ஏற்பாட்டிற்கு சரி என்று சொன்னவன் இன்று பிணமாக உள்ளான். 4 வருடமாக ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்றான் என்று அவரது தாய் தெய்வானை கண்ணீர் மல்க கூறினார்.












Click it and Unblock the Notifications