முருகன் மாநாடு.. மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி என்ன? கணக்கு போட்டு காய் நகர்த்திய பாஜக!
மதுரை: பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்படும் முருகன் மாநாடு மதுரையில் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம். இந்த மாநாடு மூலமாக பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், சிதறி கிடக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யும் முதல் படியாக முருகன் மாநாடு இருப்பதாக கூறி இருக்கின்றனர்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நடந்து வருகிறது. இந்த முருகன் மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். அறுபடை வீடுகளின் கண்காட்சி அமைக்கப்பட்டிருப்பதால், அதனை பார்க்க மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். இன்று மாலையில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடவுள்ளனர்.

மதுரை முருகன் மாநாடு
இந்த நிலையில் முருகன் மாநாடு நடத்தப்படுவதற்கு மதுரை தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அரசியல் ரீதியாக மதுரை மாவட்டம் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், முருகன் மாநாடு நடத்தப்படுவது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பாஜகவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்காது
இதுகுறித்து பத்திரிகையாளர் துரை கருணா பேசுகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியல், ஆன்மீகத்தை மக்கள் எளிதாக பிரித்து பார்க்க கூடியவர்கள். இந்த முருகன் மாநாடு மூலமாக பாஜக அரசியல் ஆதாயம் பெற முடியாது. ஆனால் முருகன் பக்தி என்பது அனைவருக்கும் அதிக ஈடுபாடு இருக்கிறது. ஏற்கனவே மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரம் சில மாதங்களுக்கு முன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
முக்குலத்தோடு சமூக வாக்குகள்
அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மறைவுக்கு பின் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் பல்வேறு பிரிவுகளாக சிதறி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு பக்கமும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பக்கம் இருக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதனை அதிமுக மற்றும் பாஜக கண்கூடாக கண்டு உணர்ந்தது.
சிதறி இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள்
தேனி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியது. இதனால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணி பக்கம் திருப்பவே இந்த முருகன் மாநாடு நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது. மதுரையில் செளராஷ்டிரா சமூக வாக்குகளையும் முழுமையாக அறுவடை செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை ஏன்?
அதேபோல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தையும் பாஜக முருகன் மாநாடு மூலமாக தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை அமித்ஷா வந்த போதே, முருகன் மாநாடு குறித்து பேசி இருந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் முருகன் மாநாட்டிற்கு வந்திருப்பதால், அடுத்தக்கட்ட பணிகளில் பாஜக கூடுதல் கவனம் செலுத்தும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications