அம்மா கையினால் மரணம்..நரகாசுர வதம்..நாடெல்லாம் கொண்டாடும் தீபாவளி..புராண கதை
மதுரை: மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர், கொடிய நரகாசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் தினமே தீபாவளி பண்டிகை. இந்த நாள் நரக சதுர்த்தசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. மக்களுக்கு நரக வேதனையை அளித்து வந்த நரகாசுரனை நரக சதுர்த்தசி அன்று அழித்தார் கடவுள். அன்று அவனது அழிவு நிகழ்ந்து துயரம் அகன்றதால், 'நரக சதுர்த்தசி நீராடல் துயரத்தை அகற்றும்' என்பது உறுதியாகிவிட்டது. நரகாசுரன் துயரத்தில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைந்த நாள் அது. அன்று துன்பம் விலகியதில் மக்களிடம் மகிழ்ச்சி பொங்கியது. அந்த நாளையே பண்டிகை நாளாக கொண்டாடுகிறோம்.
ஐப்பசி மாதம் அமாவசைக்கு முந்தைய நாளான 'சதுர்த்தசி' 'நரக சதுர்த்தசி' யாக கொண்டாடப்படுகிறது.
வராக அவதாரத்தின் போது மகாவிஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் . இவர் தன்னுடைய தாயினால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை வதம் செய்ததாகவும் கூறுகிறது புராண கதை.
நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் புராண கதையை பார்க்கலாம்.

நரகாசுரன்
பூதேவியின் மகனான நரகாசுரன், பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, தனது தாயைத் தவிர வேறு யார் கையாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றவன். நம்முடைய அம்மா எப்படி நம்மை அழிப்பார் என்ற ஆணவம் நரகாசுரனுக்கு ஏற்பட்டது. நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவாதி தேவர்களும் முனிவர்களும் பகவான் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர். நரகாசுரனை அழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

கிருஷ்ணர் கொடுத்த வாக்கு
பகவான் மகா விஷ்ணு தனது எட்டாவது அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தின் போது நரகாசுரனை வதம் செய்வதாக வாக்களித்தார். பகவான் மகாவிஷ்ணு. பூமா தேவி சத்யபாமாவாக அவதாரம் எடுத்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். ஒரு கட்டத்தில் நரகாசுரனுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையே போர் நடக்கிறது.

மகனை சம்ஹாரம் செய்த தாய்
போர்களத்தில் சத்யபாமாதான் தேரை ஓட்டிக்கொண்டிருக்கிறார். நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதுவும் கிருஷ்ணரின் லீலைதான். இதைப்பார்த்து கோபமடைந்த சத்யபாமா, நரகாசூரனை வதம் செய்தார். பகவான் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும் தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரக சதுர்த்தசி
நரகாசுரன் சம்ஹாரம் செய்யப்பட்ட அந்த நாளைத்தான் 'தீபாவளி' பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம். நரகசுரனை சம்ஹாரம் செய்த நாளானதால், 'நரக சதுர்த்தசி' என்றும் தீபாவளி அழைக்கப்படுகிறது. நரகாசுரன் வதம் செய்ய நாளினை மக்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று பகவான் கிருஷ்ணரிடம் வரம் கேட்கிறார் சத்யபாமா.

மகிழ்ச்சியாக கொண்டாடும் திருநாள்
உலகில் உள்ளவர்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக் கூடாது. அன்று எல்லோரும் மங்கல நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அளித்தார் கிருஷ்ணர். நமக்கு ஏற்படும் தீமைகள் அழிந்து நன்மைகள் ஏற்பட வேண்டும் என்று பண்டிகை தினமான தீபாவளி நாளில் நாம் வேண்டிக்கொள்வோம்.












Click it and Unblock the Notifications