நியோ மேக்ஸ் மோசடி.. பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மதுரையில் மனு மேளா.. பணம் திரும்ப வருமா?
மதுரை: நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரே இடத்தில் புகார் அளிக்கும் விதமாக மதுரையில் இன்று மனுக்கள் மேளா நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த மனுமேளாவில், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து எந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டோம், தங்களது முகவர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவலை தேய்ந்த முகங்களுடன் ஏராளமானோர் மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் எல்லோரும் கையில் இருந்த பணத்தையும், உறவினர்கள் கடன் வாங்கியும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள். ஒருத்தனை ஏமாத்த முதலில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்று சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அப்படித்தான் ஆசை வார்த்தை கூறி பல லட்சம் ரூபாயை நியோ மேக்ஸ் நிறுவனத்தினர் ஆட்டையை போட்டுள்ளனர். இப்போது பணத்தை முதலீடு செய்தவர்கள் திரும்ப கிடைக்குமா? கிடைக்காதா என்று நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

விருதுநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் ரியல் எஸ்டேட் மற்றும் தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் உள்ளன. கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், 'நியோ மேக்ஸ்' மற்றும் துணை நிறுவன இயக்குநர்களான மதுரையைச் சேர்ந்த கமலக் கண்ணன் 55, பாலசுப்பிர மணியன் 54, திருச்சி வீரசக்தி 49, முகவர்கள் மணிவண்ணன், செல்லம்மாள் மற்றும் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நெல்லையில் செயல்படும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர்கள் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பல ஆயிரம் உள்ளனர். புகார் அளித்தால் பணம் திரும்ப கிடைக்காது என்றும் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலையில் ஒரே இடத்தில் வைத்து பாதிக்கப்பட்டோரிடம் புகார்களை பெறும் வகையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் டிபிபி உத்தரவின்பேரில், 'புகார் மனு மேளா' என்ற நிகழ்வுக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, இந்த மனு மேளா மதுரை புதுநத்தம் ரோட்டிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மனுமேளாவில், பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வந்து எந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டோம், தங்களது முகவர்கள், இயக்குநர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களை அளிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்" என மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தெரிவித்தார்.
நேற்றைய தினமே இது குறித்து அறிவிப்பு வெளியானதால் இன்று காலை முதலே ஏராளமானோர் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளிக்க மதுரை ஆயுதப்படை மைதானத்தில் குவிந்துள்ளனர். தாங்கள் ஏமாந்தது எப்படி? உறவினர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து விட்டு பறிகொடுத்தது எப்படி என்று தங்களுக்கு இடையே பகிர்ந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications