கோடி கோடியாக சுருட்டிய நியோமேக்ஸ்.. இயக்குநர்களுக்கு ஜாமீன்? தீர்ப்புக்கு தேதி குறித்த ஐகோர்ட் கிளை!
மதுரை: நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் முன்ஜாமின் வழக்கு தீர்ப்பை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாக கூறி கோடிக் கணக்கில் முதலீட்டைப் பெற்றனர். இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர்.

மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஓராண்டு காலமாகவே புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிறுவனம் பற்றி பொருளாதாரக் குற்றப் பிரிவு தீவிரமாக விசாரித்து வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான இயக்குநர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. நியோமேக்ஸ் மோசடி விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், கமலக்கண்ணன் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குனர்கள் பழனிசாமி, அசோக் மேத்தா பன்சால், சார்லஸ், தியாகராஜன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள், பாலசுப்ரமணியன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மனு அளித்தனர்.
இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது நியோமேக்ஸ் தரப்பில் தங்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications