மதுரையில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து- ஒருவர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!
மதுரை: மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
இன்று ஊழியர்கள் அங்கு வழக்கம் போல கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

திடீர் விபத்து
அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது எனக் கூறப்படுகிறது. இருப்பினும், விபத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலம்
மதுரை நத்தம் சாலையில் கட்டுப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கட்டுமான பொறியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். hydraulic பணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விபத்து
புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டும்போதே, இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா அல்லது மோசமான கட்டுமான பொருட்களால் ஏற்பட்ட விபத்தா என்ற சந்தேகங்களும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை நகராட்சி ஊழியர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மதுரை ஆட்சியர் அனீஷ் சேகரும் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்

அமைச்சர் பிடிஆர்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் பேசிய அவர், "பாலம் இடிந்து விழவில்லை. ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய பணியில் ஏன் வெறும் 2 ஊழியர்களை மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு உரியப் பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் விபத்துக்குக் காரணமாக இருந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும். பணியைத் தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆட்சியர் முடிவு செய்வார்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications