"விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு தடையில்லை" உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
விஜயபாஸ்கரை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைப்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசின் தனிப்பட்ட குழு அறிக்கை அடிப்படையில் விசாரிக்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தமிழ்நாடு அரசிடம் ஆகஸ்ட் மாதம் அறிக்கை அளித்தது.
அந்த விசாரணை அறிக்கையில், தன்னை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு தடை விதிக்கவும், அந்த கருத்துக்களை பயன்படுத்தவும், அந்த கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்கக்கோரி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

விஜயபாஸ்கர் மனு
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கைக்கும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேரில் ஆஜராகி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கள் குறித்த கருத்துகளைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தடையை நீக்க கோரிக்கை
அதில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை அடிப்படையிலான சட்ட நடவடிக்கை ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. இந்த சூழலில் விஜயபாஸ்கரின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரினார்.

இடைக்கால தடையை நீக்க முடியாது
இதையடுத்து நீதிபதி, விசாரணைக்காக அழைத்து, மனுதாரர் மீது குற்றம்சாட்டுவது எப்படி? எல்.கே. அத்வானி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் தான் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடையை நீக்க முடியாது. வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது.

வல்லுநர் குழு அடிப்படையில் விசாரிக்கலாம்
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேநேரம் தமிழ்நாடு அரசின் தனிப்பட்ட வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் விசாரிக்கலாம் என்று தெரிவித்தார். பின்னர் அடுத்த விசாரணை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications