மதுரை ரயில் தீ விபத்து சதி வேலையா? நேரில் ஆய்வு செய்த ரயில்வே போலீஸ் ஏடிஜிபி பரபர விளக்கம்!
மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, தெற்கு ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா விளக்கம் அளித்துள்ளார். இந்த தீ விபத்து சதி வேலையாக இருக்க வாய்ப்பில்லை என ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி, ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு டீ போட முயன்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சமைப்பதற்காக கேஸ் சிலிண்டர், விறகு, அடுப்புக்கரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வைத்திருந்துள்ளனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லக்கூடாது என்ற விதி இருந்தும் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் கொண்டு வந்து ரயிலில் பற்ற வைத்ததே விபத்துக்கு காரணம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினார். மேலும், தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவினரும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குநர் வனிதா விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தினார். தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை முழுமையாகப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏடிஜிபி வனிதா, "விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகளை அனுப்பி வைத்த டிராவல்ஸ் நிறுவனம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். வட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்கிறோம். ஆனால் இது போன்று இவ்வளவு எரிபொருட்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம்.
மதுரை ரயில் நிலையத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தப்படவில்லை. மத்திய ரயில்வே காவல்துறையினர் வருகை தந்து விபத்து குறித்து விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளனர். முதற்கட்டமாக 8 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. 8 பேரின் உடலை உடற்கூராய்வு செய்யப்பட் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.
உயிரிழந்தவர்களின் உடலை விமானம் மூலமாக சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications