ஸ்விக்கி, சோமாட்டோவிற்கு நோ டெலிவரி.. உணவகங்கள் முடிவு பற்றி நாமக்கலில் வாடிக்கையாளர்கள் சொல்வது என்ன?
மதுரை: உணவு டெலிவரிக்கு கமிஷன் தொகையை அதிகப்படியாக வசூலிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி ஸ்விக்கி, சோமாட்டோ நிறுவனங்களிடம் இருந்து, இன்று முதல் உணவு ஆர்டர் பெறுவது இல்லை என நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ள நிலையில், இது பற்றி வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஸ்விக்கி, சோமாட்டா நிறுவனங்களுக்கு டெலிவரி செய்ய உணவு வழங்கப்படாது என்று நாமக்கல் தாலுகாவில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு கமிஷன் தொகை முறையாக கிடைக்கவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே இதனை முறைப்படுத்த வேண்டும் என்றும் எங்கள் கோரிக்கையை ஏற்காத வரை ஸ்விக்கி, சோமாட்டோவிற்கு உணவு விநியோகம் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

80 ரூபாய் உணவு 150க்கு விற்பனை
இன்று முதல் உணவு விநியோகம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:- ஸ்விக்கி, சோமாட்டா ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் துவக்கத்தில் குறைந்த விலையில் உணவு விநியோகம் செய்து வந்தன. வாடிக்கையாளர்களை கவர பல சலுகைகளையும் அடிக்கடி அறிவித்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை.
ஹோட்டல்களில் 80 ரூபாய் உள்ள உணவு பொருள், ஆன்லைனில் 120 ரூபாய் அளவுக்கு விலை லிஸ்ட் செய்யப்படுகிறது. அதுபோக, பிளாட்பார்ம் கட்டணங்களையும் தனியாக சேவை நிறுவனங்கள் வசூலிக்கின்றன. டெலிவரி கட்டணம் தனியாக செலுத்த வேண்டும். 80 ரூபாய் மதிப்புள்ள ஒரு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டால் கிட்டத்தட்ட 150 ரூபாய் ஆகிவிடுகிறது.
வாடிக்கையாளர்கள் சிரமம்
தற்போது ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்வதை வைத்து பார்க்கும் போது பெருமளவு லாபம் அந்த நிறுவனங்களுக்கே கிடைக்கின்றன. எனவே, ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் ஆன்லைனில் ஆர்டர் போட்டு சாப்பிட்டு பழகிய வாடிக்கையாளர்கள் சிரமப்படுவார்கள். எனவே விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும்" என்றனர்.
அதே நேரத்தில் நாமக்கலில் பல்வேறு இடங்களில் வழக்கம் போல் ஆன்லைனில் உணவு கிடைக்கின்றன. ஹோட்டல் உரிமையாளர்களின் இந்த முடிவால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது போல தற்போது வரை தெரியவில்லை என்றனர்.
ஆர்டர் பெற மாட்டோம்
இதற்கிடையே, கமிஷன் தொகையை குறைக்காவிட்டால் மதுரையிலும் சில ஹோட்டல்கள் ஸ்விக்கி, சோமாட்டோவிற்கு உணவு விநியோகம் செய்வது இல்லை என்று முடிவு செய்துள்ளதாக தென் மண்டல ஹோட்டல் சங்க தலைவர் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வாடிக்கையாளர்களிடம் இரு நிறுவனங்கள் சர்வீஸ் சார்ஜ், ஜி.எஸ்.டி., என தனியாக வசூலிக்கின்றன. எங்களிடம் 30 சதவீதம் கமிஷன் தொகை பிடிக்கின்றன.
எங்களை கேட்காமல் 10 சதவீதம் விளம்பர செலவு என பிடித்தம் செய்கின்றன. கடைகளுக்கு ஏற்ப தினமும் அல்லது வாரந்தோறும் பணத்தை கொடுக்கின்றன.. நிறுவனங்களின் கமிஷன் தொகை அதிகமாக உள்ளது. எங்களுக்கு விலை கட்டுப்படி ஆவது இல்லை. எனவே, வாடிக்கையாளருக்கும் அதிக செலவு ஆகிறது. கமிஷன் தொகையை குறைக்காவிட்டால், இந்த ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்களிடம் இருந்தும் உணவு ஆர்டர்கள் பெறுவதில்லை என மதுரையில் 100 ஓட்டல்களில் முடிவெடுத்துள்ளோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications