கார்த்தி சிதம்பரத்தை ஓரமாக உட்கார வைத்த கே.என்.நேரு! சட்டை செய்யாத அமைச்சர் பெரியகருப்பன்!
மதுரை: மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆய்வுக் கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தை அங்கிருந்த அமைச்சர்கள் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அமைச்சர்கள் பெரியகருப்பன், மூர்த்தி, கே.என்.நேரு ஆகியோர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், ''ம்.. நீங்க சொல்லுங்கம்மா'' என வட்டார வளர்ச்சி அலுவலரை பேச்சை தொடரக் கூறினார் அமைச்சர் நேரு.
இதனிடையே வேறு வழியில்லாமல் மேடையில் ஓரமாக கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்று அமர்ந்தார் கார்த்தி சிதம்பரம்.

சர்ச்சைப் பேச்சு
தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு முழு சுதந்திரம் கிடையாது எனக் கூறி கார்த்தி சிதம்பரம் அண்மையில் பற்ற வைத்த நெருப்பு கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. மேலும், அண்ணாமலையுடன் அவர் செல்ஃபி எடுத்த விவகாரமும் திமுக முகாமை உஷ்ணமாக்கியுள்ளது. இதனால் திமுக அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் கார்த்தி சிதம்பரத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள்

மதுரையில் கூட்டம்
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆய்வுக் கூட்டத்துக்கு கார்த்தி சிதம்பரம் தாமதமாக வந்து சேர்ந்தார். அங்கு அமர்ந்திருந்த சிவகங்கை மாவட்ட அமைச்சரான கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தியை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை. அதேபோல் அமைச்சர் மூர்த்தியும் கார்த்தியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அமைச்சர் நேரு மட்டும், ''அவருக்கு உட்கார இடம் கொடுங்கப்பா'' என ஓபன் மைக்கில் கூறிவிட்டு ''ம்.. நீங்க சொல்லுங்கம்மா'' என வட்டார வளர்ச்சி அலுவலரை பேச்சை தொடரக் கூறினார்.

ஓரமாக இடம்
கார்த்தி சிதம்பரம் வேறு வழியில்லாமல் மேடையில் ஓரமாக போய் அமர வேண்டிய சூழல் உருவானது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஏற்கனவே முறைப்படி அமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் அனுப்பியும் காலதாமதமாக வந்ததால் அமைச்சர்கள் அவரை வரவேற்க முன்வரவில்லை. அதுமட்டுமல்லால் அண்மையில் அவர் கூறிய கருத்து திமுகவை உரசி பார்க்கும் வகையில் இருந்ததும் ஒரு காரணம்.

தமிழரசி
இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் அருகில் அமர்ந்திருந்த மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியும் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டார். இதனால் கார்த்தி சிதம்பரம் அந்த ஆய்வுக் கூட்டத்தில் பரிதாபமாக அமர்ந்திருந்து எழுந்து சென்றார்.












Click it and Unblock the Notifications