நேற்று ஒருவர், இன்று வேறொருவர், நாளை யாரோ! அதிமுக உதயக்குமாரை கிண்டல் செய்த ஓபிஎஸ் மகன்
மதுரை: "முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களே.. நேற்று – அம்மா அவர்களின் மறு உருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்.. இன்று – எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி… நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?" என முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ஓபி ரவீந்திரநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் கடந்த சில தினங்களாக கோஷ்டி பூசல் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையனும் கோகுல இந்திராவும் தங்களது அதிருப்திகளை தெரிவித்திருந்தனர்.

அதிலும் செங்கோட்டையன், அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்த விழா அதிமுக சார்பில் நடைபெறவில்லை, இது முழுக்க முழுக்க அத்திக்கடவு - அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பால் நடத்தப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினாலும் அதை செங்கோட்டையன் ஏற்பதாக தெரியவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது பிரச்சினை வெடித்ததால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று அதிமுகவை பார்த்து திமுக மிரள்கிறார்கள் என்றால் அது ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் வழி வகுத்தது ஆகும்.
ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மற்றொரு புறம் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடுகிறது. அம்மா, புரட்சித் தலைவரின் வடிவில் எடப்பாடியார்தான் எங்களுக்கு கடவுள். அம்மா புரட்சித்தலைவரின் ஆன்மா இணைந்து எடப்பாடியார் ஆன்மாவுடன் உள்ளது யாராலும் இந்த கட்சியை வீழ்த்த முடியாது என தெரிவித்திருந்தார். இது மறைமுகமாக செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்ட பதிலாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் உதயகுமாரின் பேட்டிக்கு முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் மகனுமான ஓபி ரவீந்திரநாத், இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களே.. நேற்று – அம்மா அவர்களின் மறு உருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்.. இன்று – எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி… நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications