என்டிஏ கூட்டணியில் சேர வாய்ப்பு.. டிடிவி தினகரன், அண்ணாமலை சந்திப்பு நன்மைக்கே.. ஓபிஎஸ் பேட்டி!
திண்டுக்கல்: 2026 சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறிய ஒபிஎஸ், எங்களுக்கு என்று தனிக்கொள்கை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டம் வந்த போது, அவரை வரவேற்க ஓபிஎஸ் அனுமதி கோரி கடிதம் அனுப்பினார். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ்-க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ் அறிவித்ததோடு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையும் அட்டாக் செய்தார்.

இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பாக அமமுகவும் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதனால் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திடீரென கலகக்குரல் எழுப்பிய செங்கொட்டையனும் இவர்களுடன் கைகோர்த்தார்.
தேவர் ஜெயந்தி நாளன்று ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த சூழலில் நேற்றிரவு கரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் டிடிவி தினகரன் - அண்ணாமலை இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதனால் மீண்டும் கூட்டணி குறித்த பேச்சுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எங்களை பொறுத்தவரை அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் கருத்து என்னவென்றால், அதிமுக ஒன்றுபட்டால் தான் வெற்றி பெற முடியும் என்று மக்கள் கருதுகின்றனர். அதேபோல் புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
SIR படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். அதேபோல் அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கு என்று தனிக் கொள்கை இருக்கிறது. அந்த கொள்கை அடிப்படையில் என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் எதுவும் நடக்கலாம். அதேபோல் அதிமுகவுடன் இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கோட்டையன், டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நாங்கள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். டிடிவி தினகரன், அண்ணாமலை சந்திப்பு நல்லதுதான். அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புகள் உள்ளது. ஆதரவாளர்கள் விலகுவதால், எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால் பலவீனம் அடைய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications