பசும்பொன்னில் திடீர் பதற்றம்- சீமானுக்கு எதிராக ஆவேச முழக்கம்! எதிர்ப்புகளுடன் தேவருக்கு மரியாதை!
மதுரை: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமக்கு எதிரான ஒழிக முழக்கங்களுக்கு இடையே தேவர் நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் பசும்பொன்னில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் இணைந்து பணியாற்றியவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறப்பு மற்றும் மறைவு நாள் இன்று. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி (பிறந்த நாள்) விழா மற்றும் 62-வது குருபூஜை( மறைவுநாள்) ஆகியவற்றை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பசும்பொன்னுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்தார். முக்குலத்தோர் ஜாதி தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு அந்த ஜாதியினர் ஏற்கனவே சீமானுக்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் பசும்பொன்னுக்கு வரக் கூடாது என எச்சரித்திருந்தனர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சீமான் எதிர்ப்பு முழக்கங்கள் pic.twitter.com/glPDTdK3fd
— மா.ச. மதிவாணன் (@masamathi) October 30, 2024
இந்த பின்னணியில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நுழைந்த சீமானுக்கு எதிராக அங்கு கூடியிருந்தவர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். சீமான் ஒழிக! சீமான் திரும்பிப் போ! என இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டதால், தேவர் நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்கத்தையும் நாம் தமிழர் கட்சியினர் செலுத்தினர்.












Click it and Unblock the Notifications