பிரதமர் மோடியுடன் கைகோர்த்த நடிகர் அஜித்குமார்..? அட்ராசிட்டி செய்யும் “பாசக்கார” மதுரை ரசிகர்கள்..!
மதுரை : அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், மதுரையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பிரதமர் நரேந்திரமோடியுடன் அஜித்குமார் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நடந்து வருவது போன்ற போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது.
இதனால், வலிமை 'அப்டேட்' வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணைத்தில் 'டிரெண்ட்' செய்து வந்தனர். வலிமை அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது.

வலிமை படம்
படத்தின் டைட்டில், மோசன் போஸ்டர், சிங்கில்ஸ், டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் அவ்வப்போது குஷிப்படுத்தி வந்தது போனி கபூர் தரப்பு. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொங்கலை வலிமையுடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் புத்தாண்டு முதல் கண்விழித்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஆசையில் மூனு யூனிட் மணலைக் கொட்டியது கொரோனா பாதிப்பு.

ரசிகர்கள் ஆர்வம்
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் தயாரிக்கப்பட்ட வலிமை திரைப்படம் இம்மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமூகப் பிரச்சினைகளைப் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என இயக்குனர் வினோத் கூறியிருந்த நிலையில் தியேட்டர்கள் வலிமையை கொண்டாட காத்திருக்கின்றன. வழக்கம் போல் அஜித் வந்து நின்றாலே போதும் எனக்கூறும் ரசிகர்கள் அவரை தரிசிக்க 24ஆம் தேதி எப்போது வரும் எனவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

பிரம்மாண்ட போஸ்டர்
பிரம்மாண்ட கட் அவுட்டுகள், நூற்றுக்கணக்கான அடி நீள பிளக்ஸ் பேனர்கள், என தியேட்டர் வாசல்களில் தற்போது இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துள்ளது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்றே பால்அபிஷேகம், அன்னதானம் என அஜித் ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வெளியாக உள்ள நிலையில் டிசைன் டிசைனாக பிளக்ஸ் பேனர்களை தயார் செய்து தமிழகம் முழுவதும் ஒட்டி கவனம் பெற்றுள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருடன் அஜித் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் தற்போது பேசு பொருளாக உள்ளது.

அசத்தல் போஸ்டர்
மதுரையில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பிரதமர் நரேந்திரமோடியுடன் அஜித்குமார் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நடந்து வருவது போன்றும், அவருக்கு பின்னால் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, போரீஸ் ஜான்சன் ஆகியோர் உயர் பாதுகாப்பு படையினருடன்நடந்து வருவது போன்ற படங்களுடன், உலகநாடுகள் எதிர்ப்பார்க்கும் வலிமை, இதுவே சிட்டிசனுக்கு பெருமை என்ற வாசகங்களோடு, வலிமை திரைப்படத்தை உலக நாடுகளும், அதன் அதிபர்களும் எதிர்நோக்கி இருப்பதாக சித்தரித்து ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications