உயர் பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா? ஆளுநர், பிரதமர் மோடியை விமர்சித்த திருமாவளவன்
மதுரை: கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பேசியிருந்தார். இதற்கு, பிரதமரை விமர்சித்து இருக்கும் திருமாவளவன், உயர் பதவியில் இருக்கும் மோடி இப்படி சினிமா ரசிகரை போல பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த படத்துக்கு முழுமையான ஆதரவை தெரிவித்தார். தீவிரவாதத்தின் புதிய முகத்தை ‛தி கேரளா ஸ்டோரி' வெளிப்படுத்துவதாக கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

‛தி கேரளா ஸ்டோரி' எனும் திரைப்படம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த படத்துக்கு ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதோடு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு சதித்திட்டங்கள் தீட்டுவது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தது தான் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகும்.
இந்த படத்திற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் களத்திலும் தி கேரள ஸ்டோரி படம் குறித்த பேச்சு வந்தது. குறிப்பாக பிரதமர் மோடி இந்த படத்தை பாராட்டி பேசியிருந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, "அழகிய கேரளா மாநிலத்தில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்ட ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முயற்சிக்கிறது.
தீவிரவாதம் தற்போது புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சமூகத்தை உள்ளிருந்து பிரித்தாள்வதற்கான வேலையை செய்கிறது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது'' என்று பேசியிருந்தார்.

தி கேரள ஸ்டோரி படத்தை பாரட்டி பேசிய பிரதமர் மோடியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:- தி கேரளா ஸ்டோரி என்ற படம் கேரளாவில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அதி உயர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கும் பிரதமர் மோடி, ஒரு சினிமா ரசிகரை போல கருத்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். சினிமா படத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி பேசிகொண்டு இருக்கிறார். அவருடைய பொறுப்பிற்குரிய மகத்துவத்தை சிதைக்கிற வகையில் ஒரு திரைப்படத்தை பற்றிய விமர்சனத்தை பிரதமர் வைக்கிறார்" என்றார்.
தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கள் பற்றி பேசிய திருமாவளவன் இது பற்றி கூறுகையில், "ஒரு ஆளுநராக இருந்துகொண்டு அந்த பொறுப்பின் மகத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடிய வகையில் பேசுவதும் செயல்படுவதும் கண்டனத்துக்குரியது. அவர் பதவி விலகிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்படட்டும் " என்று கூறினார்.












Click it and Unblock the Notifications