மதுரைக்காரர்னு நிரூபிச்சிட்டாரே.. என்ன பெரிய PS-2.. பிடிஆர் தான் ஹைலைட்! அதிமுக மாஜி சொல்றத பாருங்க!
மதுரை : மதுரைக்காரர்கள் பொதுவாகவே வீரமானவர்கள், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரைக்காரர் என்பதை நிரூபித்துவிட்டார், என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "வேலைப்பழுவால் இன்று தொழிலாளர்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழலில் திமுக அரசு 12 மணி நேரம் வேலை சட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தது. உழைக்கிறவர்களுக்கு தான் வேலையின் கஷ்டம் தெரியும்.

2 கெட்டப் ரஜினி : தந்தை கருணாநிதி முதமைச்சர், தற்போது ஸ்டாலின் முதலமைச்சர், தனது மகனை அமைச்சராகிவிட்டார். இவர்களுக்குத் தொழிலாளர்கள் கஷ்டம் எப்படி தெரியும்? குடிசையில் இருக்கிறவர்கள் கூட ஆட்சி செய்யும் அதிகாரம் என்ற சமத்துவத்தைப் பெற்றுத் தந்தவர் அறிஞர் அண்ணா. ஆனால், அவர் தொடங்கிய இயக்கம், தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராகப் போய் நிற்கிறது. ஆனால், அண்ணாவின் பெயரில் தொடங்கப்பட்ட அதிமுகதான் எப்போதும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது.
ரஜினிகாந்த் படம் போல் மீசை வச்ச ரஜினி மீசை இல்லாத ரஜினி என்பது போல் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது வேறொரு பேச்சு என மாறிவிடுவார்கள். சட்ட மசோதா இயற்றிவிட்டு எதிர்ப்பு தெரிவித்த பிறகு வாபஸ் வாங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். நிறுத்தி வைக்கிறேன் என்று சொன்ன முதல்வர் வாபஸ் பெற்று விட்டாதாக கூறி சிவப்பு சட்டை அணிந்து மே தின கூட்டத்திற்கு வருகிறார்.

வீரமான மதுரை : அதிமுக எதிர்ப்பால் மட்டுமே திமுக அரசு 12 மணிநேரம் வேலைச் சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. திமுகவினர் நடித்து மக்களையும், தொழிலாளர்களையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். போராடிப் பெற்ற உரிமைகளை முதலாளிகளுக்காக திமுக அரசு தட்டிப்பறிக்கப் பார்க்கிறது. தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதுவுமே செய்யாத திமுகவுடன் பொதுவுடமையைப் பற்றி பேசுகிற கம்யூனிஸ்ட் இயக்கங்கள், இன்று ஓட்டிக் கொள்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதி அமைச்சர் ஆடியோ தான் ஹைலைட். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே, ஸ்டாலின் மகன், மருமகன் சம்பாதித்த ரூ.30 ஆயிரம் கோடி பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். மதுரைக்காரர்கள் பொதுவாகவே வீரமானவர்கள். பழனிவேல் தியாகராஜன் மதுரைக்காரர் என்பதை நிரூபித்துவிட்டார்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications