"இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்கீங்க; முதல்வராக ஆக்ட் பண்ணுங்க!” விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
மதுரை: இன்னும் முதல்வராகவே ஆக்ட் செய்றீங்களே! முதல்வராக எப்ப ஆக்ட் செய்ய போறீங்க என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். "சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியவில்லை; விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை-உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம்? எதற்கு முதல்வர் பதவி?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆட்சி உருவாக்கம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தவெக அரசா அல்லது சர்ச்சை அரசா என்ற விமர்சனங்களும் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்புக் குறைபாடு, வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு போன்றவை அனைத்து தரப்பு மக்களையும் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பாதித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான்.
விஜய் பூஜ்ஜியத்திலேதான் ராஜ்ஜியம் செய்கிறாரே தவிர, மக்களுக்கான ஒரு அக்கறை இருப்பதைப் போலத் தெரியவில்லை. அவர் போஸ் கொடுப்பதிலே பாஸாக இருக்கிறார். ஆனால், மக்கள் நிலையோ அந்தோ பரிதாபமாக இருக்கிறது. போஸ் கொடுத்தால் விலைவாசி குறைந்துவிடுமா? போஸ் கொடுத்தால் சட்டமன்றத்தைக் காப்பாற்றிவிடலாமா? போஸ் கொடுத்தால் மின்சாரக் கட்டணம் குறைந்துவிடுமா? தடையில்லா மின்சாரம் வந்துவிடுமா? சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்காமல் இருப்பார்களா? பெண்கள் பாதுகாப்பு வந்துவிடுமா?
போஸ் கொடுப்பதிலே தவறு ஒன்றுமில்லை. அது அவருடைய விருப்பம், வரலாறு காணாத வகையில் விலைவாசி இருக்கிறதே, இதற்கு ஏதாவது தீர்வு காணுங்கள் என்று சொன்னால், அவருடைய அக்கறை எல்லாம் ஒவ்வொரு நாளும் போஸ் கொடுத்து தன்னைப் பாஸாகக் காட்டிக் கொள்வதில்தான் இருக்கிறது.
நீங்கள் போஸ் கொடுக்கிற பாஸா, மக்கள் பிரச்சினையைத் தீர்க்கிற மக்கள் பாதுகாவலரா என்பதுதான் இப்போது மக்களுடைய கேள்வியாக இருக்கிறது. இன்றைக்கு விலைவாசி உயர்வு என்று சொன்னால், ஏதோ ஒரு அரசு மீது குற்றச்சாட்டு அல்ல.
அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் என அனைத்து விலையும் உயர்ந்திருக்கிறது. இதில் யார் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், 95 சதவீத மகளிர்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு அரசில் விலைவாசி உயர்வதும், அதை கட்டுப்படுத்துவதும் எல்லா அரசுகளிலும் நடந்திருக்கிறது. ஆனால், இந்த முதல்வர், அது குறித்து எந்த விளக்கமும் தருவதற்கு முன்வர மறுக்கிறார். முதல்வர் வந்து அதற்குரிய விளக்கம் சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொல்லணுமா, இல்லையா? முதல்வர்தானே ஆறுதல் சொல்லணும், யார் சொல்லுவா?
செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கிலாந்து ஸ்காட்லாந்தில் இருக்கக் கூடியதற்கு நிகரான காவல்துறை கோட்டையை விட்டுட்டு நிற்கிறார்கள். சிறைச்சாலையில் கைதிகள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுகுறித்து முதல்வர் வாய் திறக்கவே இல்லையே! அந்த அளவுக்கா தமிழ்நாட்டு மக்கள் வந்து கேவலமாகப் போய்விட்டார்கள்? அனாதையாகப் போய்விட்டார்களா? ஆதரவற்று போய்விட்டார்களா? இந்த அன்னைத் தமிழகத்தைப் பாதுகாப்பதற்கு நாதி இல்லையா? தவெக அரசில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு எதற்கு ஆட்சி? உங்களுக்கு எதற்கு அதிகாரம்? நீங்கள் எதற்கு சிஎம்?
முதல்வர் ஆயிட்டீங்க. இன்னும் ஆக்டிங்கை விடுங்க. நீங்கள் வந்து முதல்வராக ஆக்ட் பண்ணுங்க. அதை விட்டுட்டு இன்னும் ஆக்டிங்கிலேயே இருக்கிறீங்க. தமிழ்நாட்டுக்கு எப்ப விடிவுகாலம் கிடைக்கும்னு மக்கள் கண்ணீர் வடிக்கிறாங்க ப்ரோ. அவங்க கண்ணீரைத் துடைக்கிறதுக்கு ஏதாவது வழி செய்யுங்க.
மக்கள் மீது அக்கறையோடு சொல்றேன் பாஸ். ப்ளீஸ் பாஸ். போஸ் கொடுங்க பாஸ். அதோட இந்த மக்களுக்கு பாஸாக இருந்து வழிநடத்துங்க பாஸ். மக்களுக்கு நல்லது செய்யுங்க பாஸ். ப்ரோ. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுப் பேசியுள்ளார்.





Click it and Unblock the Notifications
