மதுரை சித்திரை திருவிழாவில் கட்டுப்பாடு.. அன்னதானம், நீர், மோர் வழங்குவதற்கு வழிமுறைகள் வெளியீடு
மதுரை: மதுரையில் பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சித்திரை திருவிழாவையொட்டி அன்னதானம், நீர், மோர், குடிநீர் வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் பங்கேற்பார்கள். இந்த திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றதாகும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 28 ம் தேதி தொடங்கி மே மாதம் 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் எப்ரல் 28 ம் தேதி முதல் மே 10 வரை நடைபெற உள்ளது.
அதன்பிறகு அழகர்கோயில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8 முதல் மே 17ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. மே 10ம் தேதி மாலை 6 மணி முதல் 6.15 மணிக்குள்ளாக அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மே 11ம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது. மே 12ம் தேதி காலை 5.45 மணியிலிருந்து 6.10 மணிக்குள்ளாக சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
சித்திரை திருவிழாவில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் மக்கள் திரள்வார்கள். இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கும். சித்திரை திருவிழாவுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வைகை ஆற்றில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஏதுவாக தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம், நீர், மோர், குடிநீர் வழங்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம், நீர், மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்க கூடாது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் கழிவுகளை மாநகராட்சியின் குப்பை தொட்டியில் போட வேண்டும்.
அன்னதானம், நீர், மோர், குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்க ரூ.100 கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புதுறையின் அனுமதி பெற்று வழங்க வேண்டும். உணவு மற்றும் உணவு பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை whatsapp No. 9444042322ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்'' என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications