சவுக்கு சங்கர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு.. தமிழக அரசு கடும் ஆட்சேபம்.. என்ன நடந்தது?
மதுரை: பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்து உள்ளேன். அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்திடும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன். எனவே அனைத்து வழக்குகளுக்காகவும் ஒரே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட அனுமதித்து உத்தரவிட வேண்டும் என யூடியூபர் சவுக்கு சங்கர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவைக்கு கொண்டு சென்று கோவை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும், சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே திருச்சி, பெரம்பலூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தாம்பரம், சேலம், நாகப்பட்டினம், நெல்லை, நீலகிரி ஆகிய நகரங்களில் 16 காவல் நிலையங்களில், சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே கரூரில் பண மோசடி வழக்கிலும் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவபர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம் 7 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல் கோவை சைபர் கிரைம் வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது. அத்துடன் டெல்லியில் உச்ச நீதிமன்றமும் சவுக்கு சங்கருக்கு குண்டாஸ் வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில்,தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் மீண்டும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுடன், சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லையெனில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டு ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் சிறையில் இருந்து வந்த சவுக்கு சங்கர், மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர் பல்வேறு காவல் நிலையங்களில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படடார். இதைடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் சவுக்கு சங்கர் கூறுகையில், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டேன். பின்னர் என் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்பேரில், குண்டர் சட்டம் ரத்தானது. பெண் காவலர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்து உள்ளேன். அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஆஜராகி கையெழுத்திடும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது நான் சென்னையில் வசிக்கிறேன். எனவே அனைத்து வழக்குகளுக்காகவும் ஒரே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட அனுமதித்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல என கடும் ஆட்சேபம் தெரிவித்தார். முடிவில், சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. எந்தெந்த வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications