Seeman: திமுக, அதிமுகவை பேய், பிசாசுனு விமர்சித்த சீமான்! விஜய்யையும் விட்டு வைக்கலை!
மதுரை: அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை பேய், பிசாசு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அதாவது மக்கள் திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களிப்பதைதான் அவர் இப்படி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி வைத்தால் என்னென்ன நிகழும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள். அடுத்த முறை பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்கிறார்கள்.

அதாவது அதிமுக வரக் கூடாது என திமுகவுக்கும், திமுக வரக் கூடாது என அதிமுகவுக்கும் மக்கள் வாக்களிக்கிறார்கள். கூட்டணிக்கு சென்ற விஜயகாந்தின் தேமுதிகவுக்கு என்ன நடந்தது? 10 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் திடீரென சரிந்ததற்கு காரணம் கூட்டணி வைத்ததுதான். அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சரிவுக்கும் அதுதான் காரணம்.
அதிமுகவை வைத்து திமுகவை எப்படி ஒழிக்க முடியும்? தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது. மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில்தான் 60 ஆண்டுகளாக திமுக பயணிக்கிறது.
அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் திமுக, அதிமுக பயணிக்கிறது. அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது வந்துவிட போகிறது. திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டிருப்பார்கள் என சீமான் தெரிவித்தார்.
தேனியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு நில உரிமை வழங்கக் கோரி சீமான் மாடுகள் மேய்த்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டாலும் 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. மாறாக 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. இப்படியே அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட்ட நாதக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு 15 சதவீதம் வாக்கு பெற்றது. தற்போது அந்த கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
தான் கட்சி தொடங்கியது முதலே சீமான் தனித்தே போட்டியிடுகிறார். அதிமுக, திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டாலும் அவர் தனித்து போட்டியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அதே நேரம் திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications