எந்த மலை பேசினாலும் எல்லா மலையும் உருட்டப்படும்.. இது திராவிட மண்.. சீண்டிய செல்லூர் ராஜு!
மதுரை: காவிகள், அவர்கள், இவர்கள் என எந்த மலை பேசினாலும் எல்லா மலையும் உருட்டப்படும். இது திராவிட மண், மற்றவர்களை உருட்டி விட்டெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட பொதுக்கூட்டம் மதுரை கீரைதுரை பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திரைப்பட நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான சிங்கமுத்து, மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மலை உருட்டி விடப்படும்: இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், “இந்த மண் உள்ளவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெல்ல எவனாலும் முடியாது. இதற்கு இடையிலே காவிகள், அவர்கள், இவர்கள் என எந்த மலை பேசினாலும் எல்லா மலையும் உருட்டப்படும். இது திராவிட மண், மலைகளை உருட்டி விட்டெரியும். பெரியார், அண்ணாவின் பூமி. இங்கு திராவிட இயக்கம் தான் கோலோச்ச முடியும். வேறு யாரும் திராவிடத்தை ஆள்வதற்கு வக்கில்லை.” எனப் பேசினார்.
மேலும் பேசிய செல்லூர் ராஜு, “விடியல் தருவோம் என்று கூறி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று 150 சதவீதம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்.
உதயநிதிக்கு பட்டாபிஷேகம்: தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மகளிர் காவல்நிலையம் என பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி சாதனை படைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இன்றைக்கு அனைத்து திட்டத்திற்கும் மூடு விழா நடத்தி வருகிறது திமுக அரசு. அனைத்து மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என கூறி தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்குவதாக சொல்கிறார்கள்.
திமுக இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி தான் என கொண்டு வந்து விட்டார்கள். இன்று பட்டம் சூட்டுவதற்காக தண்ணீராக பணத்தை செலவழிக்கிறார்கள். ஊழலை தடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது திமுக ஆட்சி. நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பிரேக் கொடுக்க வேண்டும்.” எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications