டிபன் பாக்ஸ் கொடுக்கிறார் மூர்த்தி.. மதுரை மேற்கில் சூரியன் உதிக்காது.. அடித்து சொன்ன செல்லூர் ராஜூ!
மதுரை: மதுரை மேற்கு தொகுதியில் திமுகவினர் டிபன் பாக்ஸ்-க்கு பதிலாக ஹாட் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திமுக எதற்காக வாக்காளர்களின் விபரங்களை சேகரித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய செல்லூர் ராஜூ, மதுரை மேற்கில் சூரியன் உதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக தரப்பில் மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பு அமைச்சர் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இருந்து வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியை குறி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மதுரை மேற்கு தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

செல்லூர் ராஜூ பேட்டி
இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொகுதியின் தேர்தல் பணிகளை இப்போது தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதி தொடங்கும் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த குற்றங்களுக்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். ஆனால் திமுக ஆட்சியில் இதுவரை எந்த ஒரு சம்பவத்திற்கும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது இல்லை. இதுவரை யார் அந்த சார் என்று சொல்ல மறுக்கிறார்கள் என்று கூறினார்.
முருகன் மாநாடு
தொடர்ந்து மதுரையில் இந்து முன்னணி சார்பாக நடத்தப்படும் முருகன் மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு, முருகன் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள அறிவுறுத்தினால் கலந்து கொள்வோம். திமுக கூட்டணியை பொறுத்தவரை யார் வலுவாக இல்லை என்று சொன்னார்கள். ஆனாலும் அவர்களாகவே எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்.
திமுக கூட்டணி
எதற்காக அப்படி சொல்ல வேண்டும்? கூட்டணி பிரிந்துவிடும் என்ற பயம் காரணமாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை என்ன தான் கூட்டணி அமைத்தாலும், மக்கள்தான் எஜமானர்கள். மக்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி என்று அமித் ஷாவே சொல்லிவிட்டார் என்று கூறினார்.
திமுகவின் டிபன் பாக்ஸ்
தொடர்ந்து, அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்காக என கூறி மக்களிடம் அடையாள அட்டைகளை திமுகவினர் பெறுகிறார்கள். தனி மனிதனின் முழு விபரங்களை திமுகவினர் சேகரித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் திமுகவினர் மேற்கு தொகுதியில் டிப்பன் பாக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
டிபன் பாக்ஸ்-க்கு பதிலாக மக்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கும் சூரியன் உதிக்காது
திமுகவினர் எதற்காக ஆவணங்களை பெறுகிறார்கள் என தெரியவில்லை. சோதனை அடிப்படையில் திமுகவினர் மேற்கு தொகுதியில் ஆவணங்களை பெறுகிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என பணியாற்றி வருகிறோம். மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மேற்கில் சூரியன் மறைய தான் செய்யும். அமைச்சர் மூர்த்தி தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் திமுக வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications