மதுரை செல்லூர் அருகே பரபரப்பு! தப்பி ஓட முயன்ற ரவுடி, துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்..நடந்தது என்ன?
மதுரை: மதுரை செல்லூர் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்டீபன் ராஜ்ஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். போலீசாரை தாக்கிவிட்டு ஓட முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை தபால் சந்தி நகர் பகுதி அருகே ஓய்வு பெற்ற காவலரின் மகள் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிடம் நகைப்பறிக்கும் சம்பவம் நடைபெற்றது.

இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மதுரை மாநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களிடம் நகைப்பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக ரவுடி ஸ்டீபன் ராஜ் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்டீபன் ராஜை மதுரை செல்லூர் நகர போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஸ்டீபன் ராஜ் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் அரிவாளால் காவலர் ஒருவரின் தோள்பட்டையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் வலது தோள்பட்டையில் காவலர் காயமடைந்தார்.
இதையடுத்து தப்பி ஓடிய ரவுடி ஸ்டீபன் ராஜை தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், ரவுடி ஸ்டீபன் ராஜின் வலது முட்டியில் இரண்டு குண்டுகள் பாய்ந்தது. இதையடுத்து வலது காலில் காயமடைந்த ஸ்டீபன் ராஜை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வலது தோள்பட்டையில் காயமடைந்த காவலரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை நகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வந்த வழிப்பறி மற்றும் நகைப்பறிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக ரவுடி ஸ்டீபன் ராஜ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் மதுரை சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications