தீண்டாமைக்கு 'நறுக்' குட்டு.. மதுரை டூ தென்காசிக்கு பறந்த தின்பண்டங்கள்.. கலக்கிய சமூக ஆர்வலர்கள்
மதுரை: தென்காசியில் தீண்டாமையால் தின்பண்டங்கள் மறுக்கப்பட்ட பட்டியலின மாணவர்களுக்கு, மதுரையில் இருந்து சுவையான தின்பண்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஜாதி வெறியர்களுக்கு சரியான குட்டு வைத்தது போல ஆகியுள்ளது.
சக மனிதன் ஒருவனை தன்னை விட தாழ்ந்தவன் என நினைப்பவன் ஒரு மனநோயாளி எனக் கூறினார் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். அவர் கூறி 70 ஆண்டுகள் கடந்தும் கூட இத்தகைய மன நோயாளிகள் இருப்பார்கள் என சிறிதும் அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.
சமூகத்தை பீடித்திருந்த தீண்டாமை என்ற கொடும் வியாதியை போக்க சட்டங்களும் இயற்றப்பட்டு விட்டன. கல்வியறிவும் புகப்பட்டுவிட்டன. ஆனால் வெளிப்படையான தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற போதிலும், சிலரின் மனதிற்குள் அந்த வன்மம் இன்னும் இருக்கவே செய்கிறது என்பதை நிரூபித்துவிட்டது தென்காசி சம்பவம்.

ஊர்க் கட்டுப்பாடா..?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி மாணவ, மாணவியர் பெட்டிக் கடை ஒன்றில் நேற்று முன்தினம் தின்பண்டம் வாங்க சென்றனர். அப்போது அந்தக் கடைக்காரர், அவர்களிடம் "உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்று ஊர் கட்டுப்பாடு போட்டுள்ளனர்" என்கிறார். அதற்கு அந்தக் குழந்தைகள் வெள்ளந்தியாக "ஊர் கட்டுப்பாடா.. அப்டினா?" என வினவுகின்றனர். அதற்கு அவர், உங்கள் தெருவில் இருப்பவர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என ஊரில் பேசி முடிவெடுத்து இருக்கிறார்கள்; போய் உங்கள் வீட்டிலும் சொல்லுங்க" எனக் கூறி அந்த பிஞ்சுகளை விரட்டுகிறார்.

பாய்ந்த நடவடிக்கை
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிலும், ஜாதீய தீண்டாமைக்கு எதிராக போராடிய பெரியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சமூக நீதியாக கொண்டாடிய தினத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது மக்களின் மனசாட்சியை உலுக்கியது. இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஊருக்குள் வர தடை..
முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், பெட்டிக் கடையை நடத்தி வந்த மகேஸ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களை ஊருக்குள் குறிப்பிட்ட காலத்துக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஊரே தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நினைத்துக் கொண்டு பட்டியலின மாணவர்கள் மீது தீண்டாமை வன்மத்தை பாய்ச்சியவர்கள், தற்போது அந்த ஊருக்குள்ளேயே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

தின்பண்டம் பார்சல்
குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஏதும் அறியாத பிஞ்சு வயதில் தீண்டாமையை எதிர்கொண்ட மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்து வருகிறது.
அந்த வகையில், மதுரையில் உள்ள சமூக ஆர்வலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் நடத்தும் கடைகளில் இருந்து முறுக்கு, மிக்சர், மிட்டாய் என 5 கிலோ தின்பண்டங்களை வாங்கி, மதுரை காந்தி நகர் தபால் நிலையத்தில் இருந்து தென்காசியில் உள்ள சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பார்சல் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications