கேட்பவன் கேணப்பயலா இருந்தா கேரளாவுல எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.. மு.க.ஸ்டாலின் பேச்சு
Recommended Video

மதுரை: பொல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது என்பதற்கு உதாரணம்தான் பொள்ளாட்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை மக்களவை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை வண்டியூர் சுற்றுச்சாலையில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பெரும் திரளாக கூடியிருந்தனர். அவர்களிடையே வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டி ஸ்டாலின் பேசியதாவது:

தாங்க முடியாத கொடுமை
ஆட்சியின் கொடுமையை தாங்க முடியாத நிலையில் வெயிலின் கொடுமை பரவாயில்லை என காத்திருக்கிறீர்கள். மோடியின் தலைமையில் நடைபெறும் பாசிச ஆட்சியை அகற்ற தொண்டர்கள் முனைப்போடு உள்ளீர்கள். 1980ல் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணியை கலைஞர் துவக்கினார். அதே இடத்தில் 29 ஆண்டு கழித்து கட்சி தலைவராக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் மோடியின் ஆட்சியை அகற்றி நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த பிரச்சார கூட்டம் நடைபெறுகிறது.

கீழடி வெங்கடேசன்
தேர்தல் அறிக்கை கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியும்தான். கீழடியில் அகல்வாராய்ச்சி பணிகள் தடையின்றி நடை பெற நிதி ஒதுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கீழடி அகலாய்வு நடைபெற முக்கிய பங்கு வகித்தவர் வேட்பாளர் சு.வெங்கடேசன். சு.வெங்கடேசன் போன்ற எழுத்தாளர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் எங்களுக்கு மட்டுமல்ல தொகுதி மக்களாகிய உங்களுக்கும் பெருமையாக இருக்கும்.

மோடி மறந்து விடுவார்
எய்ம்ஸ் அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது ஆனால் இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்க மோடி மறந்து விடுவார். பாரதிய ஜனதா ஆளும் உத்திரப்பிரதேசத்திற்கே எய்ம்ஸ்க்கு முறையாக பணம் ஒதுக்கப்படாத மோடி தமிழக எய்ம்ஸ்க்கு எப்படி நிதி ஒதுக்குவார்? மதுரைக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது?

பேயாட்சி நடத்தும் எடப்பாடி
தாயுள்ளத்தோடு கலைஞர் ஆட்சி நடத்தினார், ஆனால் எடப்பாடி பேய் ஆட்சி நடத்தி வருகிறார். 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளாக தேசிய மாதிரி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோடி செய்தது மோசடி என்பதால் அவரை மோடி என்று அழைக்க வேண்டாம் மோசடி என்று அழையுங்கள்.

இந்தியா வளரவில்லை
மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடையவில்லை தளர்ச்சியடைந்துள்ளது. 5 .18 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை மோடி ஆட்சியில் 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய வேலை வாய்ப்பின்மையில் 45 ஆண்டு காலம் பின்னோக்கி சென்றுள்ளது. வாயில் வடை சுடும் ஆட்சி அதற்கு மோடியே சாட்சி. மூடிக் கேற்ற ஜாடியாக மோடிக்கேற்றவராக எடப்பாடி திகழ்கிறார். சர்வாதிகாரியாக உள்ள மோடியும் உதவாக்கரையா உள்ள எடப்பாடியும் ஆட்சி இருக்கையில் இருந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள், மக்களை பற்றி சிந்திப்பதில்லை, இருவரையும் ஆட்சிக்கட்டிளிருந்து அகற்ற வேண்டும். பொள்ளாச்சியில் கடந்த 7 வருடமாக நடைபெற்று வரும் பாலியல் வன்மத்தை இந்த ஆட்சி தற்போது வரை தட்டிக் கேட்கவில்லை.,காவல்துறையும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது. உளவுத்துறை செயல்பட்டதா. பொள்ளாச்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி எடுத்து வருகிறது.

வடை சுடும் ஆட்சி
பொள்ளாச்சி ஜெயராமன் என்பவரின் இரண்டு மகன்கள் பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று வீடியோ ஆதாரங்கள் உள்ளது., இது துப்புகெட்ட ஆட்சி அதற்கு தூத்துக்குடியை சாட்சி. இது ஊழல் ஆட்சி அதற்கு ரபேல் சாட்சி. இது கொள்ளைக்கார ஆட்சி அதற்கு ஜிஎஸ்டி சாட்சி. இது மதவெறி ஆட்சி அதற்கு மாட்டுக்கறியே சாட்சி. இது வாயில் வடை சுடும் ஆட்சி அதற்கு மோடியே சாட்சி.

சிறுமிக்கு பாலியல் கொடுமை
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் தொல்லையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இப்படி இருக்கும்போது சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். கோவையில் 7 வயது சிறுமி பாலியல் துன்புறத்தல் செய்யப்பபட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் பழனிசாமி வாய் கூசாமல் பிரசாரத்தில் கூறி வருகிறார். கெட்டுப் போன ஆட்சி என்பதற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கெட்டுப் போன ரத்தம் கர்ப்பிணிகளுக்கு செலுத்தியதே முன் உதாரணம். உயிரைக் காப்பற்றும் அரசு மருத்துவமனை கொலைக் கூடாறாமாக மாறிவிட்டது.

ராகுல் திட்டத்திற்கு வரவேற்பு
ராகுல் காந்தி அறிவித்த ஆண்டிற்கு 72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன், வழிமொழிகிறேன். இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள்தாக இருக்கும். ராகுல் காந்தியின் இந்த 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கண்டு மோடி அச்சமடைகிறார். தி.மு.க ஆதரவோடு மத்தியில் நல்லாட்சி அமையவுள்ளது. வரும் ஜூன் மாதம் ராகுல் காந்தி முதல் 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்படும்.

ஜெ. மரணத்தில் மர்மம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது ,அம்மா டீ சாப்பிட்டார்கள், டீ குடித்தார்கள், சூஸ் குடித்தார்கள் என்பது குறித்துதான் விவாதம் நடைபெற்றதே தவிர மருத்துவம் குறித்து எதுவும் வெளிவரவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரப்படும், உன்மையாக இருக்கும் அதிமுக தொண்டர்களுக்காக இதை நான் அறிவிக்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏதாவது முறையான தகவல் தெரிவிக்கப்பட்டதா?

குற்றவாளி கூண்டு
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் முதலமைச்சராக இருந்த போது மருத்துவமனையில் இருந்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. ஜெ மருத்துவமனையில் இருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சரும் செயலரும் அமைச்சர்களும் ஏதாவது தகவல்களை சரியாக சொன்னார்களா? ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உண்மை வெளிவராது. ஜெ மரணத்தில் இருக்கிற உண்மைகளை வெளிக்கொண்டுவர குழு அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வரப்படும், இதில் சம்மபந்தப்பட்டவர்கள் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள். சொன்னதைச் செய்வோம். செய்வதைச்சொல்வோம். உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். கலைஞர் உடல் நலிவுற்ற போது ஈரோட்டு மாநாட்டிலே ஆட்சியை கைப்பற்றி உங்களிடம் சமர்ப்பிப்பேன் என்று சொன்னேன். அதற்கான காலம் நமக்கு வந்து கொண்டிருக்கிறது என்று மு.க ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications