என்ன லேட்? அதான் மார்கழி பிறந்துடுச்சே! கார்த்திகைக்கு இன்னும் 360 நாள் இருக்கு! நீதிபதிகள் கோபம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகம் - தர்கா தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டால் தீர்வு கிடைக்க தாமதப்படுத்தும் என ராமரவிக்குமார் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், "மார்கழி பிறந்துவிட்டது, அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360-க்கும் மேலான நாட்கள் உள்ளன என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், அறநிலையத் துறை உள்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காரசாரமான விவாதங்கள் நடந்தன.
வக்ஃபு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தான் தூண் இருக்கிறது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் சமரச் தீர்வுக்கு தயார்" என்றார். அரசு தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விகாஸ் சிங் தனது வாதத்தில், "மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று மட்டுமே கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பிய மனுவில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தனி நீதிபதி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்றார்.
1994 ஆம் ஆண்டு தீர்ப்பில் மேலே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கூறவில்லை. மாற்று இடத்தில் ஏற்றலாம் என பரிசீலனை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கோயில் நிர்வாகம்- தர்கா தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பேச்சுவார்த்தை விவகாரத்தில் தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் என மனுதாரர் தரப்பு பதில் அளித்தது.
அப்போது நீதிபதிகள், "மார்கழியே பிறந்துவிட்டது. அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360 நாட்களுக்கு மேல் உள்ளன" என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சை வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதி விசாரணைக்கு தடையில்லை என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications