திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த கலவரத்தை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா? தமிழக அரசு கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என தெரியவில்லை. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் விளக்கு ஏற்றாததால் மனுதாரர் தரப்பினர் மோதல் சம்பவங்களில் ஈடுபட்டனர்.
போலீஸார் தடுப்பு
போலீஸாரின் தடுப்புகளை மீறி தூக்கி எறிந்துவிட்டு இதனால் போலீஸாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த இந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என தெரியவில்லை.
4 வாரங்கள்
நியாயப்படி மனுதாரர்கள் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க 4 வாரங்கள் உள்ள நிலையில் இப்போதே அவசரம் காட்டியது ஏன்?
10 பேர் மட்டுமே நுழைய முடியும்
வெறும் 10 பேர் மட்டுமே நுழையக் கூடிய இடத்திற்கு கும்பலாக சென்று அமைதியை சீர்குலைத்துள்ளனர் என தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது. மேலும் தனது வாதத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருப்பதாவது: "சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர்நீதிமன்ற பாதுகாப்புக்கு வந்தவர்கள், அவர்களால் எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும், அவர்கள் தமிழக காவல் துறைக்கு இணையானவர்கள் அல்ல.
தீபத் தூண்
"நேற்று மாலை 6 மணிக்கு தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்" என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
30 நாட்கள் அவகாசம்
நீதிமன்ற அவமதிப்புக்கு அன்றே தண்டனை வழங்க முடியாது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டிய நிலையில் விதிமுறைகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார் சுவாமிநாதன்.
நீதிமன்ற அவமதிப்பு
மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்.அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்க பட்டுள்ளனர் . மதப்பிரச்சனை ஏற்படும் நிலை உருவானது. தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது.
மத்திய பாதுகாப்பு படை
மத்திய பாதுகாப்பு படையினர் நீதிமன்றத்தை பாதுகாக்கவே உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக நீதிபதி அனுப்பியது ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்கக் கூடாது" என வாதிட்டுள்ளார்.
நடந்தது என்ன
கார்த்திகை தீபம் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதை கண்டித்து இந்து அமைப்பினரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். அப்போது கோயில் சார்பாகவும் போலீஸார் தரப்பிலும் வைக்கப்பட்ட தடுப்புகளை இந்து முன்னணியினரும் பாஜகவினரும் கீழே தள்ளினர். தடுப்புகளை உடைத்தெறிந்துக் கொண்டு முன்னோக்கி வர முயற்சித்தனர்.
மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றி வருகிறார்கள்.
தீபத் தூணில் விளக்கேற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் மனுதாரர் ராம ரவிக்குமார், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது காவல் ஆணையர் லோகநாதன், "144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் உள்ளே செல்ல அனுமதி இல்லை" என்றார்.
144 தடை உத்தரவு
அப்போது மத்திய படையினர், தங்களிடம் இருந்த கோர்ட் ஆர்டரை காட்டி அனுமதி கேட்டனர். ஆனால் லோகநாதனோ, 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கி தர்கா அருகே விளக்கேற்றுமாறு நீதிபதி சுவாமிநாதன் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இதை கண்டித்து தமிழக அரசு அவசர வழக்காக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications