அயோத்தி செல்லும் தமிழக புனித தீர்த்தங்கள்.. திருப்பரங்குன்றத்தில் தொட்டு வணங்கிய இஸ்லாமிய சகோதரர்கள்
மதுரை: தமிழ்நாட்டில் உள்ள புனித நதிகள், ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித தீர்த்தங்கள் அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மலையில் இருந்து எடுக்கப்பட்ட புனித தீர்த்தத்தை இஸ்லாமிய சகோதரர்கள் தொட்டு வணங்கி அனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரம்மாண்ட கோவில்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் ,மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்: தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. 12நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப் படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான்.
அயோத்தி அறக்கட்டளை: இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படும்கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
பால ராமர்: 2022 ஜூன் மாதம் 1ம் தேதி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குழந்தை இராமர் கோயிலின் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார். குழந்தை இராமர் கோயிலுக்கான கருவறை பீடம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த கிரானைட் கற்களால் அமைக்கப் பட்டுள்ளது . கீழ்தளத்தில் உள்ள இந்த கருவறையில் தான் மூலவர் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்யப் பட இருக்கிறது .
தயாராகும் அயோத்தி: மூலவரை இராம் லல்லா என்கிறார்கள். இராம் லல்லா என்றால் குழந்தை இராமர் அல்லது பால இராமர் எனப்பொருள் படும் . இந்த இராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார். வரும் ஜனவரி 22ஆம் தேதி இராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
கும்பாபிஷேகம்: பொதுவாக கும்பாபிஷேகத்திற்கு புனித நதிகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் புனித நீர் கடங்கள் புறப்பாடு நடைபெறும். இந்த புனித நீர் கொண்டு ஒவ்வொரு கோவிலிலும் கும்பாபிஷேக நாள் அன்று கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்படும். அயோத்தியில் உள்ள ராமர் கோவில் ஜனவரி 22 இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்தும் புனித தீர்த்தங்கள் அயோத்தியை நோக்கிய பயணப்பட உள்ளன.
தமிழ்நாடு தீர்த்தங்கள்: தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் கடலில் இருந்து சிறு குடங்களில் புனித நீர் எடுத்து அயோத்தி அனுப்பும் பணியை விஷ்வ இந்து அமைப்பு ஏற்பாடு செய்தது. சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலை பூஜைக்கு பின் சிறிய ஐந்து சில்வர் குடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டது.
சிறப்பு பூஜைகள்: பின்னர் ஐந்து கலசங்களில் எடுக்கப்பட புனித நீரை கடற்கரை பகுதியில் இருந்து பகவதியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுச் சென்றனர். தொடர்ந்து பகவதியம்மன் சன்னிதானத்தில் புனித நீர் அடங்கிய 5 குடங்களையும் வைத்து அர்ச்சனை செய்தனர். இந்த, புனித நீர் குடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு ஃபிளைவுட் பெட்டியில் வைத்து, தொடர் வண்டியில் பார்சல் மூலம் அயோத்திக்கு அனுப்ப இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

குற்றாலம்: அருவிகளில் இருந்து எடுக்கப்பட்ட புனித தீர்த்தத்தை கலசத்தில் அடைத்து காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்று அயோத்திக்கு நேற்று வழி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி குற்றாலம் விவேகானந்தா ஆசிரமம் சுவாமி அகிலாண்ட மகராஜ் ஆசியுடன் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் பிஜேபி விஹெச்பி இந்து முன்னணி அனைத்து அமைப்பை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய ரத வீதி வழியாக பஜனை நடத்தி புனித நீர் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: இதனிடையே திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறையினரிடம் பாஜகவினர் அனுமதி கோரியிருந்தனர். மலைமேல் உள்ள சிக்கந்தர் சமாதி வழியாக புனித தீர்த்தம் கொண்டு செல்வதாக கூறியதால் காவல்துறையினர் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து பாஜகவினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, காவல்துறையினரை தொடர்பு கொண்டு அனுமதி கோரினர்.
வணங்கி வாழ்த்திய இஸ்லாமியர்கள்: இரண்டு பேர் மட்டுமே திருப்பரங்குன்றம் மலை மீது சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு வர அனுமதி அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர், சிவாச்சாரியார்கள் துணையினர் மலைமீது சென்ற பாஜகவினர் கலசத்தில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்தனர். சிக்கந்தர் பாதுஷா சமாதி அருகே வந்த போது அங்கு வந்த கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் புனித தீர்த்த கலசத்தை தொட்டு வணங்கி வாழ்த்து கூறினர். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
புனித நதி தீர்த்தங்கள் வருகை: ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புனித தீர்த்தமானது நாடு முழுவதிலும் புனித நதிகளில் இருந்து எடுக்கப்பட்டு அயோத்தி கும்பாபிஷேகத்திற்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications