திருமங்கலம் அருகே கோவில் கறிவிருந்தில் குடி போதையில் தகராறு- துப்பாக்கி சூடு நடந்ததால் பரபரப்பு!
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே கோவில் கறி விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கறிவிருந்து நடத்திய தனசேகர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ளது காட்டு பத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் இன்று நேர்த்திக் கடன் செலுத்தியவர்கள் கிடா வெட்டி கறி விருந்து பரிமாறப்பட்டு வந்தது. அப்போது திடீரென அங்கு துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டது. இதனால் கறி விருந்தை ரசித்து சாப்பிட்டவர்கள் பதற்றமடைந்து சிதறி ஓடினர்.

நேர்த்தி கடன் விருந்து
இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு உடனே போலீசார் விரைந்தனர். அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். திருமங்கலம் அருகே காட்டு பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் டி.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். நேர்த்திக் கடனுக்காக கிடாய் விருந்து வைத்துள்ளார் தனசேகரன். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் ரியல் எஸ்டேட் மூலம் பழக்கமான நண்பர்களை விருந்துக்கு அழைத்தார்.

குடிபோதை தகராறு
இந்நிலையில் விருந்திற்கு வந்த மதுரையைச் சேர்ந்த வேதகிரி என்பவருக்கும் குருட்டு கணபதி என்பவருக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வேதகிரி ஆத்திரத்தில் காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். துப்பாக்கி சப்தம் கேட்ட உடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இருவருக்கு வலைவீச்சு
இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய வேதகிரி மற்றும் கணபதியை தேடி வருகின்றனர்.

எந்த துப்பாக்கி?
மேலும் இச்சம்பவத்தில் வேதகிரி பயன்படுத்தியது எந்த வகை துப்பாக்கி என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை லைசென்ஸ் ஏதேனும் வேதகிரி பெற்றிருந்தாரா? என்ன காரணத்தை முன்வைத்து துப்பாக்கி லைசென்ஸ் வாங்கினார்? எனவும் விசாரணை நடைபெறுகிறது. லைசென்ஸ் பெறாத நிலையில் வேதகிரி கள்ள துப்பாக்கியை பயன்படுத்தினாரா? என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications