திருப்பரங்குன்றத்தில் தர்கா எப்போது வந்தது தெரியுமா? பின்னால் இருக்கும் வரலாறு
மதுரை: இன்று திருப்பரங்குன்றம் மலை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கிறது. குறிப்பாக மலையில் அசைவம் உண்ணக்கூடாது என்று ஒரு தரப்பினர் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். உண்மையில் திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது? இதை இந்த செய்தி விளக்குகிறது.
மதுரைக்கு வயது எவ்வளவோ அவ்வளவு வயது திருப்பரங்குன்றத்திற்கும் உண்டு. இன்று முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடாக திருப்பரங்குன்றம் இருந்தாலும், இக்கோயில் உண்மையில் சிவனுக்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.பி 6-8வது நூற்றாண்டில், அதாவது இன்றிலிருந்து 1200-1400 ஆண்டுகளுக்கு முன்னர், அப்போது ஆட்சியிலிருந்த பராந்தக நெடுஞ்சடையனின் 6வது ஆட்சியாண்டில் இக்கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அவனுடைய படையில் இருந்த சாத்தன் கணபதி என்பவர்தான் இந்த கோயிலை உருவாக்கியதாக கிரந்த கல்வெட்டுகள் கூறுகின்றன. தொடக்கத்திலிருந்தே இக்கோயிலில் முருகன் துணை கடவுளாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் கி.பி 12ம் நூற்றாண்டில், அதாவது 900 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் முருகன் கோயிலாக மாறியிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சரி சிவனுக்கும், முருகனுக்கும் மட்டும்தான் மலையில் கோயில் இருந்ததா? என்று கேட்டால்.. பெருமாள், துர்கை மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களுக்கும் இங்கு கோயில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தவிர கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரை கோயில் ஒன்றும் மலையில் இருக்கிறது. மலையின் தெற்கு பகுதியில் உள்ள இந்த குகை, தற்போது அர்த்தநாரீசுவரர் கோயிலாக இருக்கிறது. ஆனால் தொடக்கத்தில் சமண குகையாக இந்திருக்கிறது என்று தொல்லியல் ஆய்வாளர் தேவகுஞ்சரி கூறியிருக்கிறார்.
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் இங்கு தர்கா வந்திருக்கிறது. டெல்லியில் சுல்தான் ஆட்சியில் இருந்தபோது, இங்கு சுந்தர பாண்டியருக்கு உதவுவதாக கூறி, இஸ்லாமிய படைகள் மதுரைக்குள் நுழைந்தன. இன்றிலிருந்து சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1310ம் ஆண்டில் இஸ்லாமிய படைகள் மதுரைக்குள் நுழைந்திருக்கலாம் என்றும், பின்னாட்களில் பாண்டியர்களை வீழ்த்தி 1334ல் சுல்தான் ஆட்சி மதுரையில் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக 1372ல் அலா அல்-தின் சிக்கந்தர் ஷா மதுரையின் சுல்தானாக ஆட்சியில் இருந்தார். சுல்தான்களால் வீழ்த்தப்பட்ட பாண்டியர்கள், திருப்பாண்டியனின் தலைமையில் விஜயநகர பேரரசு ஆதரவுடன் பெரும் படை திரட்டி போர் செய்தனர். இந்த போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரம், சிக்கந்தருக்கு உதவ ராமநாதபுரத்திலிருந்து மற்றொரு சுல்தான் பெரும் படைகளை அனுப்பினார். ஆனால் அதற்குள் பாண்டியர்கள் திருப்பரங்குன்றத்தை கைப்பற்றிவிட்டனர். பதிலுக்கு சுல்தான் படைகள் மதுரையை கைப்பற்றியது.
மதுரையின் ஆளுநர் பொறுப்பு சிக்கந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர் மன அமைதிக்காக திருப்பரங்குன்றத்தில் குடியேறினார். போர் முடிந்தாலும், மீண்டும் சுல்தான் படைகள் வலுப்பெற்றுவிடுமோ என்று அஞ்சிய பாண்டியனின் படைகள் திருப்பரங்குன்றம் மலை மீது வைத்து சுல்தான் சிக்கந்தரை கொன்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பின்னர் அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தர்காவும் உருவானது. ஆக வரலாறு காலம் தொட்டே இந்த மலை இந்து, சமணம், இஸ்லாம் ஆகியோருக்கு இடம் அளித்து வந்திருக்கிறது. இன்றும் இந்த மலை மதநல்லிணக்க மலையாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த ஒற்றுமைக்கு அச்சம் எழுந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications