திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றத் தடுத்த மதுரை கலெக்டரை தண்டிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்
மதுரை: மக்களுக்கான நீதி கிடைக்கும் இடம், நீதிமன்றங்களே. அப்படி கிடைத்த நீதியை அமல்படுத்தாமல் தடுக்கும் அதிகாரிகளையும் அரசையும் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்று, மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.. அத்துடன் சில காட்டமான விமர்சனங்களையும் இதுகுறித்து முன்வைத்துள்ளார்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

மதுரை திருப்பரங்குன்றம்
இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஆட்சியர் மற்றும் பாதுகாப்பு வழங்கத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்கள்..
சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருந்தாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மலை தீபத்தூணில் விளக்கு
இறுதியாக, கலெக்டர் ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கை மட்டும் தனியாக பிரித்த நீதிபதி, மற்ற அதிகாரிகள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தார். ஆனால், வரும் மார்ச்2-ம் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின் போது மாவட்ட ஆட்சியர் மட்டும் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார்.
இதனிடையே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த விவகாரத்துக்கு மீண்டும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறும்போது, "திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கு ஏற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு என்று தெரிந்தும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, உள்நோக்கத்துடன் செயல்பட்ட மதுரை கலெக்டர், கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதித்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர்
ஆனால், தற்போது, 'நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை' என மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது, நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். இவர்கள், அப்பீல் செய்து, உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர்.
தீர்ப்பு கொடுத்த நீதிபதியை பதவிநீக்கம் செய்யக் கோரிய தி.மு.க., மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு துாண்டுகோலாக இருந்தவர்களும் இவர்கள் தான். நீதிபதி சுவாமிநாதனை தனிப்பட்ட முறையில் விமர்சித்து, அவதுாறு பரப்பி நடந்த போராட்டங்களுக்கு, அனுமதியும் பாதுகாப்பும் அளித்ததும் இவர்கள் தான்.
அர்ஜுன் சம்பத் காட்டம்
திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, பெருமாள் கோவில் பட்டியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதிலும், 144 தடை உத்தரவை கலெக்டரும், போலீசாரும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும். மன்னிப்பு கேட்டு, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முயற்சிக்கின்றனர். 'சட்டம் என்ன செய்யும்' என்பதை தெரிந்தே தவறு செய்துள்ளனர்.
ஆளுங்கட்சி நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, ஆதாயத்துக்காக இந்தக் குற்றத்தை செய்துள்ளனர். அதற்கேற்ப தண்டனையை அவர்களுக்கு வழங்க நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். வரும் காலங்களில், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல், இதே உத்தியை அதிகாரிகள் பின்பற்றுவதற்கு நீதிமன்றம் இடம் தரக்கூடாது. மக்களுக்கான நீதி கிடைக்கும் இடம், நீதிமன்றங்களே. அப்படி கிடைத்த நீதியை அமல்படுத்தாமல் தடுக்கும் அதிகாரிகளையும் அரசையும் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்..












Click it and Unblock the Notifications