மதுரையில் விஜய் ரோடு ஷோவா? அனுமதியின்றி நடத்தினால் நடவடிக்கை.. மதுரை போலீஸ் கமிஷனர் வார்னிங்
மதுரை: மதுரை விமான நிலையம் வரும் விஜய்யை வரவேற்க காலையில் இருந்தே தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்குள் விஜய்யை வரவேற்க யாரும் வர வேண்டாம் என்று நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதேபோன்று மதுரையில் ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி பெறவில்லை என்றும், மீறி ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டசபை தான் இலக்கு என்றும், ஜனநாயகன் திரைப்படம் தான் நான் நடிக்கும் கடைசி படம் என்றும் அறிவித்து இருந்தார். ஒரு பக்கம் கட்சியை பலப்படுத்தும் வேலைகளிலும், மறுபுறம் ஜனநாயகன் படப்பிடிப்பு என விஜய் பரபரப்பாக இருந்து வருகிறார்.

மதுரை வருகிறார் விஜய்
அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கடந்த 26 ஆம் தேதி விஜய் முதன் முதலாக கோவை சென்றார். அப்போது கோவை மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கோவையில் 26, 27 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
குறிப்பாக கோவை விமான நிலைய வளாகம் முழுவதையும் விஜய் ரசிகர்கள் ஆக்கிரமித்தனர். கோவை விமான நிலையமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் அங்கு அதிகளவில் கூடினர். தொடர்ந்து விஜய் திறந்த வேனில் சென்று ரோடு ஷோ நடத்தினார். அப்போதும் தவெக தொண்டர்கள், ரசிகர்கள் சாலையில் இருபுறம் நின்று விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தான் இன்று விஜய் மதுரை வருகிறார். கொடைக்கானலில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் சூட்டிங் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக விஜய் இன்று மாலை மதுரை விமான நிலையம் வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து விஜய் கொடைக்கானலுக்கு செல்கிறார். விஜய் இன்று மதுரை விமான நிலையம் வருவதை அறிந்த தவெக தொண்டர்கள், ரசிகர்கள் காலையில் இருந்தே மதுரை விமான நிலையம் முன்பு குவிந்து வருகிறார்கள்.
அனுமதியின்றி ரோடு ஷோ கூடாது
விஜய் மாலையில் தான் வருகைதரும் நிலையில் காலையில் இருந்தே அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்துள்ளனர். கோவை விமான நிலையத்தில் ஏற்பட்டது போல் இங்கு ஆகிவிட கூடாது என்பதை அறிந்த விஜய் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் யாரும் மதுரை விமான நிலையத்திற்குள் வர வேண்டாம் என்று விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை விமான நிலையத்திற்குள் வர வேண்டாம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
அதே சமயத்தில் தொண்டர்களை சந்திக்கும் வகையில் விஜய் மதுரை விமான நிலையத்தில் இருந்து 5 கிமீ தூரம் ரோடு ஷோ நடத்துவார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் மதுரையில் தவெக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். இதற்கிடையே விஜய் மதுரையில் ரோடு ஷோ நடத்த அனுமதி பெறவில்லை என்றும், மீறி ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications