தவெக 2வது மாநில மாநாடு.. மதுரை வந்தடைந்த விஜய்யின் பெற்றோர்.. காலில் விழுந்து வரவேற்ற நிர்வாகிகள்!
மதுரை: மதுரையில் நாளை தவெகவின் 2வது மாநில மாநாடு நடக்கவுள்ள நிலையில், இன்று அக்கட்சியின் தலைவர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகிய இருவரும் மதுரை வந்துள்ளனர். மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை மதுரையில் உள்ள பாரபத்தி பகுதியில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், பார்க்கிங்கிற்கு மட்டும் 6 இடங்கள் தனித் தனியாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இருக்கைகள் போடும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் மூலமாக தவெகவின் மாநாட்டுப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தவெக தலைவர் விஜய் விமானம் வாயிலாக அல்லாமல் தனது பிரத்யேக கேரவன் வேன் மூலமாகவே மதுரைக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று, கடைசி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 15 லட்சம் தொண்டர்களை பங்கேற்க வைக்க தவெக தலைமை திட்டமிட்டு வருகிறது. திருச்சிக்கு மேல் உள்ள மாவட்டங்களில் இருந்து 20 வேன்களும், திருச்சிக்கு கீழ் உள்ள தென் மாவட்டங்களில் இருந்து 40 முதல் 50 வேன்களில் தொண்டர்களை அழைத்து வர தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருக்கிறார்.
தென் மாவட்டங்களில் விஜய்க்கு பெரிய செல்வாக்கு இல்லை என்ற வாதத்தை உடைக்கும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்பதில் தவெக தீவிரமாக இருக்கிறது. இந்த மாநாட்டில் முழுக்க முழுக்க விஜய் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். அதன் காரணமாகவே சிறப்பு விருந்தினர்களுக்கு கூட தவெக சார்பாக எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற வாசகத்தை ஒவ்வொரு பேனரிலும் பார்க்க முடிகிறது. அதற்கேற்ப விஜய் மட்டுமே மாநாட்டில் உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் தவெகவின் 2வது மாநில மாநாட்டில் பங்கேற்கபதற்காக விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகிய இருவரும் மதுரை விமான நிலையம் வாயிலாக வந்து இறங்கி இருக்கின்றனர்.
அவர்களுக்கு தவெக நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள ஏராளமான ஹோட்டல்களை மொத்தமாக தவெக தலைமை கையில் எடுத்துள்ளது. மாவட்டச் செயலாளர்களின் குடும்பத்தினர், விஐபி-க்கள் உள்ளிட்ட அனைவரையும் தங்க வைப்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications