வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. ட்ரோனில் வரப் போகுது குடிக்க தண்ணீர்! வேற லெவலில் மாநாடு நடத்தும் விஜய்!
மதுரை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விக்கிரவாண்டியில் ஏற்பட்டது போல தொண்டர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் தவெக நிர்வாகிகள். குறிப்பாக ட்ரோன் மூலம் தண்ணீர் பாட்டில்கள் மருத்துவ பொருட்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. பெண்களுக்கு பிரத்தியேகமாக பிங்க் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்க நிலையும், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தமிழக அரசியலில் புதுவரவான விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்த ஆண்டே கட்சியை ஆரம்பித்தாலும் இடையில் வந்த இடைத்தேர்தல்களை கண்டு கொள்ளாத விஜய் 2026 தான் இலக்கு என திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

விஜய் அரசியல்
முதல் மாநாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்த விஜய், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துகிறார். முதலில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் 21ஆம் தேதி மாநாடு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் மாநாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
பிரம்மாண்ட மேடை, ராம்ப் வாக் என மாஸ் காட்டி வருகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் இந்த மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டை திடலும், பார்க்கிங், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தன்னார்வலர்கள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இறுதிகட்ட ஏற்பாடுகள்
மேலும் தூய்மை பணி, வரவேற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, மகளிர் பாதுகாப்பு, மருத்துவர்கள், தீர்மானம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, ஊடக ஒருங்கிணைப்பு, மேடை ஒருங்கிணைப்பு, போக்குவரத்து ஒருங்கிணைப்பு என 13 குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. எக்காரணத்தை கொண்டும் விக்கிரவாண்டில் நடைபெற்றது போல சிறு தவறு கூட இரண்டாவது மாநில மாநாட்டில் நடந்து விடக் கூடாது என விஜய் திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்.
ட்ரோன்கள்
இந்த முறை மாநாட்டுக்காக சில புதுமைகளையும் விஜய் தரப்பு அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கான தனியாக பாதைகள், பெண்களுக்கு என பிங்க் அறைகள் ஏற்பாடு, செய்யப்பட்டு இருக்கிறது. இங்கு அவசர மருத்துவ சேவைகள், சுகாதார மற்றும் தாய்ப்பால் ஊட்டுவது உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவசர தேவைகளுக்காக ட்ரோன்கள் மூலம் மருத்துவ பொருட்களையும் தண்ணீர் பாட்டில்களையும் விநியோகிக்க திட்டமிட்டு இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
தவெக நிர்வாகிகள்
மாநாட்டில் உணவு வழங்கினால் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் மாநாட்டுத் திடலில் உணவு தயாரிக்கப்படாமல் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அழைத்து வரும்போது தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பேருந்துகளிலேயே அவர்களுக்கு பிஸ்கட், ஜூஸ், தண்ணீர் பாட்டில்கள் அடங்கிய கிட் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநாட்டு தொடரை சுற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்களும் மருத்துவ சேவையில் ஈடுபட உள்ளன.












Click it and Unblock the Notifications