"வருங்கால தமிழகத்தை வழிநடத்தும் உதயநிதி.." கொஞ்சம் கேப்விட்டு அடுத்து அமைச்சர் மூர்த்தி சொன்ன விஷயம்
மதுரை: லோக்சபா தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்தார் என்ற அமைச்சர் மூர்த்தி, மிக விரைவில் உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்கப் போகிறார் என்றும் தெரிவித்தார். மேலும், உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மதுரையில் நடக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் அழகர்கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும் என்ற அமைச்சர் மூர்த்தி, விரைவில் தமிழகத்தின் துணை முதல்வர் பதவியையும் ஏற்று உதயநிதி வழிநடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் மூர்த்தி: அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, "தமிழக முதல்வர் சந்திக்கும் எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நமது முதல்வர் செய்து வருகிறார். அதன்படி வரும் 2026 சட்டசபைத் தேர்தலிலும் 200+ இடங்களில் நாம் வெல்ல வேண்டும். இதற்காக நாம் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து வேலை செய்ய வேண்டும். 2026ம் ஆண்டும் திமுகவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நம் மீது வைத்துள்ள நம்பிக்கையில் தான் முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார். அவரது எண்ணத்தை நாம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக லோக்சபா தேர்தலில் எப்படி கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றிச் சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தோமோ அதேபோல நாம் அனைவரும் சட்டசபைத் தேர்தலிலும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக நாம் இப்போதில் இருந்தே கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
கொடிக் கம்பங்கள்: கட்சி கொடி இல்லாத கிராமங்கள் இருந்தால் அதைக் கண்டறிந்து அங்கே கொடிக் கம்பங்களை நட்டு திமுக கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட தொகுதியில் சுமார் 55,000 வர்க்குகளை நாம் கூடுதலாகப் பெற்று தந்தோம். இது தான் தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. வரும் காலத்திலும் நாம் இதேபோல பணியாற்ற வேண்டும்.
உதயநிதி: லோக்சபா தேர்தல் சமயத்தில் 40 தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருந்து வெற்றிபெற இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவினார். விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கப் போகிறார். இதன் மூலம் அவர் வருங்கால தமிழ்நாட்டை வழிநடத்தப் போகிறார்.
விரைவில் துணை முதல்வராகப் போகும் உதயநிதி, மதுரையில் வரும் செப்.9ம் தேதி நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 11,500 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, 500 சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி என பல நலத்திட்டங்களை அவர் வழங்க உள்ளார். மதுரை வரும் உதயநிதிக்குப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு தர வேண்டும். இதற்காக ஒவ்வொரு பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பும் தேவை.. கூட்டு முயற்சி இருந்தால் அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பைத் தரலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications