“9 திருட்டுப்பயல்களும் செஞ்ச வேலை..” தவெக மாநாட்டில் குட்டிக்கதை சொன்ன விஜய்
மதுரை: தவெக மாநாட்டில் குட்டிக்கதை ஒன்றைச் சொன்ன விஜய், "நீங்கதான் ராஜா.. நீங்க தேர்வு செய்யப்போகும் அந்த தளபதி யார்?" என்று சூசமாக கேள்வி எழுப்பினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். இந்த மாநாட்டில் பேசிய விஜய் குட்டிக்கதை சொன்னார்.

விஜய் சொன்ன குட்டிக்கதை
விஜய் பேசுகையில், "ஒரு குட்டிக்கதை சொல்றேன். ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருப்பதற்காக ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளோடு ஒரு 10 பேர் செலக்ட் ஆகுறாங்க. அதில் ஒருவரை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். எனவே அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார்.
அந்த 10 பேரிடமும் விதை நெல்லை கொடுத்து அதனை நன்றாக வளர்த்துக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி 3 மாதங்கள் கழித்து வாங்க என்று கூறி அனுப்பி வைக்கிறார். 3 மாதம் கழித்து வரும்போது அதில் ஒருவர் ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். ஒருவர் தோள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். 9 பேர் வளர்த்திருந்தார்கள். ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை கொண்டு வந்திருந்தார்.
9 திருட்டுப் பயல்கள்
என்ன என்று கேட்டதற்கு, நானும் தண்ணீர் ஊற்றிப் பார்க்கிறேன், உரம் வைத்துப் பார்க்கிறேன்.. வளரவே மாட்டேன் என்கிறது ராஜா எனக் கூறினார். அவரை கட்டியணைத்த ராஜா, இனி இனிதான் என் தளபதி எனக் கூறினார். ஏனென்றால், அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த நெல். அது முளைக்கவே முளைக்காது.
அந்த 9 திருட்டுப் பயல்களும் என்ன பண்ணியிருக்காங்கன்னா, வேறு விதை நெல்லை வாங்கி வளர்த்து ராஜாவையும், மக்களையும் ஏமாற்றி உள்ளனர். ஒருவர் மட்டும் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ஒரு நாட்டுக்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உண்மையும் நேர்மையும் முக்கியம். இப்போது நீங்கள் எல்லோரும் தான் ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த தளபதி யார்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
தவெக தலைவர் விஜய்
மேலும் பேசிய விஜய், "சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும். மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழகுவதற்கு எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர்தான்.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள். இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?" எனப் பேசியுள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications