"புரட்சி தலைவரே" .. உங்களை அரியணையில் ஏற்ற நாங்கள் தயார்.. அதகளப்படும் தேமுதிக போஸ்டர்கள்
மதுரை: வரும் 2021 சட்டசபை தேர்தலின் போது புரட்சித் தலைவர் விஜயகாந்தின் புரட்சி அரசு அமைந்திட தயார் நிலையில் இருப்போம் என மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.
தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இவரது பிறந்தநாளின் போது ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
2006-ஆம் ஆண்டு அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல்வாதியான பிறகு இந்த நலத்திட்ட உதவிகள் விசாலமாகின.

உடல்நிலை
இந்த நிலையில் அவரது பிறந்த நாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்டதை விட இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இத்தனை நாட்கள் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால்தான் அவரது பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாடினாலும் அவரை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தது. தற்போது அவரது உடல்நலம் நன்கு தேறி வருவதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்திருந்தார்.

தைராய்டு பிரச்சினை
தொண்டையில் தைராய்டு பிரச்சினையால் அவர் சரிவர பேச முடியாமல் இருந்தார். தற்போது அதற்கும் அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவில் அவர் சிங்கம் போல் கர்ஜிப்பார் என மருத்துவர் தெரிவித்திருந்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். எப்படியும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது உடல்நிலை தேறி சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கை தொண்டர்களுக்கு வந்துவிட்டது.

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மாணவர்களின் சார்பாக வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் அவருக்கு பிரம்மாண்டமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை மாநில மாணவரணி துணைச் செயலாளர் புதுவை R விஷ்ணு பிரசாத் வடிவமைத்துள்ளார். அந்த போஸ்டர் பெரியார், சிம்மக்கல், தத்தனேரி, தங்கரீகல் தியேட்டர் அருகில், மாட்டுத்தாவணி கலெக்டர் ஆபீஸ், கோரிப்பாளையம் என பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

புரட்சி
அந்த போஸ்டரில் 2021- ஆம் ஆண்டு புரட்சி தலைவரின் தலைமையின் கீழ் புரட்சி அரசு அமைய அனைவரும் தயாராக இருப்போம் என அச்சிடப்பட்டு தலைமை செயலகத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்த நிலையில் இத்தகைய போஸ்டர்களால் மதுரையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications