விகே குருசாமி தங்கை மகன் கொலை.. சிறையில் இருந்து திட்டமிட்ட வெள்ளைகாளி.. மதுரையில் தொடரும் பயங்கரம்!
மதுரை: மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியான விகே குருசாமியின் தங்கை மகன் கிளாமர் காளிஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு பின் சிறையில் இருக்கும் மறைந்த அதிமுக நிர்வாகியான ராஜபாண்டியின் ஆதரவாளரான வெள்ளைகாளி இருப்பதாக போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மதுரை அருகே அரியமங்கலத்தைச் சேர்ந்த கிளாமர் காளிஸ்வரன். மதுரை காமராஜபுரம் பகுதியில் கிளாமர் பைக்குடன் சுற்றி வந்ததால், இவரை கிளாமர் காளி என்று அழைத்து வந்தனர். திமுக முன்னாள் நிர்வாகியான விகே குருசாமியின் தங்கை மகனான இவர், பிரபல ரவுடியாக வலம் வந்தனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்.

இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கிளாமர் காளி கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வெண்கல மூர்த்தி நகரில் தனது இரண்டாவது மனைவி மீனாட்சி வீட்டில் இருந்து வந்துள்ளார்.
நேற்றிரவு 9 மணி அளவில் மனைவி மீனாட்சியிடம் தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி வெளியில் வந்த கிளாமர் காளியை, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. கிளாமர் காளியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வந்த போது ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்தார்.
இருள் சூழ்ந்த பகுதி என்பதால் கொலை கும்பல் யார் என்ற அடையாளம் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த கிளாமர் காளியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனிடையே கிளாமர் காளி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சிறையில் உள்ள வெள்ளகாளியே காரணம் என்று சந்தேகம் கிளம்பியுள்ளது.
ஏனென்றால் காமராஜபுரம் பகுதியில் விகே குருசாமி - ராஜபாண்டி இடையிலான மோதல் அனைவரும் அறிந்தது. விகே குருசாமியின் ஆதரவாளர்கள் வெள்ளைகாளி அண்ணன் சின்னமுனுசுவை கொலை செய்ததில் இருந்து, பழிக்கு பழியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ராஜபாண்டி இறந்துவிட்டாலும், அவரின் ஆதரவாளரான வெள்ளைகாளி விகே குருசாமியின் வம்சத்தை கருவறுப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு விகே குருசாமி பெங்களூரில் உள்ள தனியார் உணவகத்தில் இருந்த போது, அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டன. இருந்தாலும் தீவிர சிகிச்சைக்கு பின் விகே குருசாமி தற்போது போலீசார் பாதுகாப்புடன் மதுரை காமராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். விகே குருசாமியின் மகனான விகேஜி மணியை கொலை செய்வேன் என்று வெள்ளகாளி தீவிரமாக இருக்கிறார்.
சிறையில் இருந்தவாறு வெள்ளைகாளி தனது டீம் மூலமாக சபதத்தை நிறைவேற்றி வருகிறார். ஏற்கனவே விகே குருசாமியின் மருமகன் பாண்டி, ஆதரவாளர்களான மூர்த்தி, பாம்பு பாண்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் மதுரை மாவட்டத்தையே உலுக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications