மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் விழுந்த தம்பதி.. தலையிலேயே ஏறி இறங்கிய பேருந்து
மதுரை: சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் நிறைய முறை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் உள்ளாட்சி அமைப்புகளோ, நாய்களை பிடித்து கருத்தடை செய்து, நாய்களின் எண்ணிக்கையை குறைக்க அக்கறை காட்டுவது இல்லை.. இதனால் பல்கி பெருகும் தெருநாய்கள், மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன. மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்ததில் சாலையில் தவறி விழுந்த தம்பதி, அரசு டவுன் பஸ் மோதி உயிரிழந்தனர்.
மதுரையில் சாலைகளில் சர்வ சாதாரணமாக நாய்கள் உலா வருகின்றன. இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் சாலைகளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டியதிருக்கிறது. சற்று அசந்தாலும் நாய்கள் காலை கவ்வி விடுகின்றன. அதேநேரம் சில நாய்கள் பொதுமக்களை விரட்டுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ளது.

மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த 56 வயதாகும் வெங்கடசுப்பு என்பவர் சிக்கந்தர்சாவடி அருகே பாசிங்காபுரம் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பத்மாவதிக்கு 54 வயது ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். மகன் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். மகள் சென்னையில் வசித்து வருகிறார். வெங்கடசுப்பு பத்மாவதிதம்பதி தனியாக டீக்கடை நடத்தி வசித்து வந்தார்கள்.
இந்நிலையில் வெங்கடசுப்புவும், அவருடைய மனைவியும் நேற்று அதிகாலை மதுரை ஜீவா நகரில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து சிக்கந்தர்சாவடியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி காமாட்சிநகர் பகுதியில் சென்றபோது, திடீரென ஒரு நாய் சாலையில் குறுக்கே பாய்ந்துவிட்டது.
இதனால் நிலைதடுமாறிய வெங்கடசுப்பு மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்த முயன்றார். அதற்குள் நாய் மீது இருசக்கர வாகனம் மோதி சறுக்கி விழுந்தது. இதில் பைக்கை ஓட்டி வந்த இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது, பின்னால் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேர் மீதும் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடசுப்பு பரிதாபமாக உயிரிழந்தார். பத்மாவதி படுகாயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பத்மாவதியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனம் விபத்திற்கு உள்ளாக காரணமான நாயும், பைக் மோதியதில் இறந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.












Click it and Unblock the Notifications