அஜித் குமாரை தாக்க போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யார்? ஐகோர்டில் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தங்க நகை காணாமல் போனதாக பக்தர் அளித்த புகாரின் அடிப்படையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது, இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார் என வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்டார்.இந்நிலையில் அவரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவிலின் காவலாளி அஜித்குமாரை (தற்காலிக ஊழியர்) போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் இருந்து தப்ப முயன்ற போது, வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்ததால் முதலில் போலீசார் கூறினார்கள்.ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசார் தாக்கியதில் தான் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்தாக தகவல்கள் வெளியானது.

Which IAS officer pressured police to attack Ajith Kumar Question raised in Madras High Court

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள், காவல்துறைக்கு அமைச்சராக பொறுப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இந்நிலையில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்க போவதாகவும் அறிவித்துள்ளன. சமூக வலைதளம் முழுக்க அஜித்குமார் பற்றி தான் விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அஜித்குமார் வழக்கை கொலை வழக்காக மாற்ற சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

காவலர்கள் கைது

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், " சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, 6 போலீசார் உடனடியாக அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேத பரிசோதனை மற்றும் நீதி விசாரணை அறிக்கைகளின் முடிவுகள் இன்று (அதாவது நேற்று) இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி, உடனடியாக இவ்வழக்கு சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளில உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

டிஜிபி விளக்கம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் போலீஸ் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது" இவ்வாறு கூறியிருந்தார்.

கோயில் ஊழியர்

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் ஆகியோர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். போலீஸாரால் தாக்கப்பட்ட கோயில் ஊழியர் அஜித்குமார் என்ன தீவிரவாதியா?. ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை கூட ஏற்கலாம். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞரை கடுமையாக தாக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

காவல்துறை நாடகம்

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், மடப்புரம் சம்பவத்துக்கு பிறகு திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அஜித்குமார் வீட்டுக்குச் சென்று ரூ.50 லட்சம் தருவதாகவும், போலீஸார் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என சமரசம் பேசியிதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார், விசாரணையின் போது தப்பி ஓட முயன்றது போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக காவல்துறையினர் நாடகமாடி இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

ஐஏஎஸ் அதிகாரி அழுத்தம்

தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளரான வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடுகையில், "இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். தற்போது வரை அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அவரது தாயார், சகோதரரிடம் காவல்துறையினர் வழங்கவே கிடையாது. அஜித் குமாரை மடப்புரம் கோயில் பின்னால் வைத்து போலீஸார் சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மேலும் அந்த வீடியோவை நீதிபதிகளிடம் வழங்கினார்.

நீதிபதிகள் கேள்வி

அந்த வீடியோவை பார்த்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் சராமரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அந்த கேள்விகள் விவரங்கள்.. தமிழ்நாடு அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். காவலாளி அஜித்குமாரை ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவில்லை?


அதிகாரம் கொடுத்தது யார்

அஜித்குமாரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் காவல்துறையினருக்கு அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை சிசிடிவி பதிவை மறைக்க விரும்புகிறீர்களா? ஏன் காவல்துறையினர் வெளி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு போலீசார் எதற்கு? முழு உண்மையையும் சொல்ல காவல்துறை ஏன் மறுக்கிறது. யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்று கூறினார்கள்.

எப்ஐஆர்

மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை, உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். காது, மூக்கில் ரத்தம் வரும் அழவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார், அந்த ரத்தக்கறைகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினார்கள். அஜித்குமார் இறக்கும் வரை அவர் ஏன் விசாரிக்கப்படுகிறார் என எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+