பாஜக நிர்வாகிகள் கைது: வெளியான ‘பகீர்’ பின்னணி.. நகைச்சுவை பிரபலம் வெங்கடேஷ் கடத்தல்.. நடந்தது என்ன?
மதுரை: மதுரையில் பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பகீர் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அசத்தப்போவது யாரு' புகழ் நகைச்சுவை நடிகர் வெங்கடேஷின் மனைவியுடன் சேர்ந்துகொண்டு பாஜக நிர்வாகிகள் வெங்கடேஷை தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் 3 பாஜக நிர்வாகிகளை நேற்று இரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேல பனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (வயது 37), பாஜக 28 வது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவரான செல்லூரை சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான கோசா குளத்தை சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பாஜக நிர்வாகிகள் கைது: இவர்கள் 3 பேரும் அடிதடி பிரச்சனை தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி வைரமுத்து என்பவர் பணத்தை வாங்கிக்கொண்டு தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து வெங்கடேஷ் ஆறுமுகத்தை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது பாஜக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆறுமுகம், சன் டிவியில் ஒளிபரப்பான 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக வலம் வந்து பிரபலமானவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 2-வில் பங்கேற்று, அதில் சாம்பியனும் ஆனார்.
வெங்கடேஷ் ஆறுமுகம்: டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான வெங்கடேஷ் ஆறுமுகம், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வருகிறார் வெங்கடேஷ். தற்போது வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் வெங்கடேஷ், ஃபேஸ்புக்கில் அரசியல் நையாண்டி பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தான், இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரை வெங்கடேஷை சிலர் காரில் கடத்தி, நாராயணாபுரம் கண்மாய் பகுதிக்கு கொண்டு சென்று, அவரை கடுமையாகத் தாக்கியதோடு, அவரது இரு கால்களையும் உடைத்துவிட்டு தப்பினர். அப்போது காவித் துண்டை அந்த இடத்தில் தவறவிட்டுச் சென்றுள்ளனர்.
கடத்தி தாக்குதல்: இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். வெங்கடேஷ், பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால், பாஜகவினர் ஆத்திரத்தில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக முன்னர் தகவல் வெளியானது.
எனினும், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கடேஷ் தனது மனைவி பானுமதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. வெங்கடேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பானுமதி, கார் டிரைவர் புதூர் மோகன் என்பவர் மூலம், வெங்கடேஷை காலை உடைத்து வீட்டிலேயே முடக்க சதி திட்டம் தீட்டியுள்ளார். மோகன் தனது நண்பர்களான பாஜகவைச் சேர்ந்த ஆனந்தராஜ், மலைச்சாமி, வைரமுத்து மற்றும் ராஜ்குமார் மூலம், வெங்கடேஷை காரில் கடத்திச் சென்றுள்ளார்.
நாராயணபுரம் பகுதியில் கண்மாயில் வெங்கடேஷை தாக்கி கால்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். போலீசாரை திசை திருப்புவதற்காக திட்டமிட்டே, காவித்துண்டை அங்கு வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.
மனைவி சதி: மனைவி பானுமதி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தே, பாஜக நிர்வாகிகள் வெங்கடேஷை தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவை கிண்டல் செய்து வெங்கடேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதால், பாஜகவினர் அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததால், வெங்கடேஷை சரமாரியாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நேற்று இரவு பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டபோது வைரமுத்து என்பவர், ‛பாரத் மாதா கீ ஜெ' என கோஷமிட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications