தேசிய கொடிக்கு அவமானம்! பிடிஆர் காரில் செருப்பு வீசியவர்களுக்கு பெயில் தர கூடாது! அரசு சுளீர் வாதம்
மதுரை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பெயில் மனுவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு சரமாரி வாதம் வைத்தது.
Recommended Video
சமீபத்தில் மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார்.
இந்த நிகழ்விற்கு வந்த பிடிஆரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. முன்னதாக பாஜகவினர் கூட்டமாக இருப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, பிடிஆர் திரும்பி செல்லும் போது அவர் காரில் செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

அவனியாபுரம்
இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மொத்தம் 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதியப்பட்ட எல்லோரும் பாஜகவை சேர்ந்தவர்கள். முதலில் 5 பேர், பின்னர் 2 பேர் அதன்பின் 3 பெண்கள் என்று மொத்தம் 10 பேர் இதில் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகிய 3 பேரும் கைதானார்கள். இவர்கள்தான் செருப்பை வீசியதாக புகார் வைக்கப்பட்டது.

வழக்கு
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அங்கு கலவரம் செய்யும் வகையில் செயல்பட்ட இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். வேங்கைமாறன், மணிகண்டன், அஜித் ஆகிய மூன்று பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன் விசாரணைக்கு இன்று வந்தது. நீதிபதி இளங்கோவன் வழக்கை விசாரித்தார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது மிகப்பெரிய தவறு. இது ஜனநாயகம் மீதான தாக்குதல். இவர்களுக்கு பெயில் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகும். அமைச்சரின் காரில் கொடி கட்டி இருந்தது. தேசிய கொடி இருந்த கார் மீது செருப்பு வீசியது தவறு. அது மிகப்பெரிய ஜனநாயகம் மீதான தாக்குதல். இதை அனுமதிக்க கூடாது.

போராட்டம்
போராட்டம் செய்ய நிறைய வழிகள் உள்ளன. அமைதியான முறையில் போராட்டம் செய்யலாம். ஆனால் இப்படி மோசமான முறையில் போராட்டம் செய்ய கூடாது. அமைச்சரின் காரில் திட்டமிட்டு தாக்கி உள்ளனர். இது கோபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. இதனால் இவர்களுக்கு பெயில் கொடுக்க கூடாது என்று வாதம் வைத்தது அரசு தரப்பு.

மனுதாரர்கள் வழக்கு
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவர் மீது வேறு குற்ற வழக்குகள் இல்லை. அவர் முதல் முறையாக இந்த வழக்கில்தான் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற விதிகளுக்கு இவர்கள் கட்டுப்படுவார்கள் அதனால் அவருக்கு பெயில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications