“சும்மா நொச்சி நொச்சினு.. எந்த கேள்வியா இருந்தாலும் விஜய்கிட்ட போய் கேளுங்க:.. டென்ஷன் ஆன அண்ணாமலை
மதுரை: "எந்தக் கேள்வியாக இருந்தாலும் விஜய் இடம் கேளுங்கள் அவரைத் தவிர அனைவருமே பேசுகிறார்கள். தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கேளுங்கள் நாங்கள் என்ன அவர்களுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? எங்களிடம் ஏன் மதுரை, சென்னை என எல்லா இடங்களிலும் நொச்சி நொச்சினு இதே கேள்விகளை கேட்கிறீர்கள்" என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தவிர்த்து மற்ற எல்லோரும் பேசுகிறார்கள்.. அவர்களிடம் போய் கேட்கிறீர்களா என அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் கோபமாகக் கேள்வி எழுப்பினார்.

தவெக சார்பாக கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திமுக அரசு மீதும், தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுகவை குற்றம்சாட்டி நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 7 பொது நல வழக்குகளும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமீன் கேட்ட வழக்குகளும் உச்சபட்ச எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒட்டன்சத்திரம் மற்றும் கரூர் செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கரூர் சம்பவம் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அண்ணாமலை, "இதை தவெக தலைவர் விஜய் இடம் கேளுங்கள். அவரைத் தவிர மற்ற எல்லோரும் கரூர் சம்பவத்தை பற்றி பேசுகிறார்கள். நாங்கள் என்ன தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபீசர்களா? எங்களிடம் கேள்வி கேட்கும் நீங்கள் அக்கட்சியினரிடம் சென்று கேட்க வேண்டும்.
தொடர்ந்து எங்களையே விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ஏன் மதுரை, சென்னை என எல்லா இடங்களிலும் நொச்சி நொச்சினு இதே கேள்விகளை கேட்கிறீர்கள். சொல்ல வேண்டிய கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் சொல்லி விட்டோம். பத்திரிகையாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கட்சியினரிடம் இது குறித்து கேள்வி எழுப்புங்கள்" என்று கோபத்துடன் பதிலளித்தார் அண்ணாமலை.
மேலும், கரூருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு வந்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் கூறியது குறித்து நாளை பேசுகிறேன் எனக் கூறிவிட்டு வேகமாகக் காரில் ஏறி சென்றுவிட்டார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications