தமிழகத்தில் விதவைகள் அதிகரிக்க காரணமே இந்த “மது அரக்கன்" தான்.. ஆய்வில் வெளிவந்த ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் விதவைகள் அதிகரிக்க காரணம் மதுபானமே என்றும், தமிழகத்தில் உள்ள கைம்பெண்களில் 38 சதவிகிதம் பேரின் கணவர்கள் மதுவால் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் கைம்பெண்களாக மாறுவதற்கு என்ன காரணம், அவர்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்து ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கத்தினர் ஆய்வு நடத்தினர்.

Liquor Tamil nadu Women

சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச் சங்கம் சார்பில், மதுரையில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இது குறித்து 'லாஸ்' LAAS மைய நிர்வாகிகள் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் கைம்பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களின் எண்ணிக்கையில் 7.3 சதவீதம்.

தமிழகத்தை பொறுத்தவரை, 2011 ஆம் ஆண்டு சென்செஸ் அடிப்படையில் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படியானால், இப்புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழத்தில் அரியலூர், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 30 அல்லது 31 கைம்பெண்கள் வீதம் 495 விதவைப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்பிற்கு மது போதை, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், விபத்து, தற்கொலை, கொரோனா போன்ற 9 காரணங்களை கூறுகின்றனர். இதில், மதுபோதையில்தான் அதிகளவில் கணவர்கள் இறந்துள்ளதாக அந்தப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

38 % பெண்கள் மதுபோதை, மதுபானம் காரணமாக கணவனை இழந்து விதவைகளாகி உள்ளனர். 34.5% பெண்கள் நோய் காரணமாக தங்கள் கணவனை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3.5% பெண்கள் சாலை விபத்துக்களால் கணவனை இழந்து உள்ளனர். 6.1 % பெண்களின் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் விதவைகள் நமது நாட்டில் வாழ்ந்து வந்தாலும், அவர்களின் உள்ளார்ந்த துயர்களை நமது சமூகம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. பாரம்பரியம், மதப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் அவர்கள் மீது இழைக்கப்படும் பாகுபாடு மற்றும் வன்கொடுமைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

விதவைப் பெண்கள் மத்தியில் கடன் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. ஏறக்குறைய 85 சதவீதம் விதவைப் பெண்கள் கடனாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருக்கின்றனர். ஆனால் 50 சதவீதம் பேர் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களிடமிருந்து மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் பெற்றிருக்கின்றனர்.

விதவைகள் தங்களுக்கான வாழ்வாதார உரிமைகளைத் தேடிப் பெறுவது பெரும் சவாலாகவே உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்ற விதவைகளில் 38.6 சதவீதம் பேர் மட்டுமே விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான ஆவணத்தை வைத்துள்ளனர். விதவைகள் இத் திட்டத்தின கீழ் பயனடைவதைத் தடுக்கின்ற காரணிகள் லஞ்சம் மற்றும் விதவைகள் குறித்தான பாகுபாட்டுக் கண்ணோட்டம் என்று கூறுகின்றனர்.

கணவரின் இழப்பு விதவைகளின் வாழ்க்கையில் அழுத்தமான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்க நேரிடும் சமூகப் புறக்கணிப்பு, தனிமை, மன உளைச்சல், கடன் சுமை, பாதுகாப்பின்மை ஆகியவை அவர்களைப் பெருளாதார மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன.

தமிழக அரசு விதவைப் பெண்களுக்ககென தனி வாரியம் அமைத்து அவர்களது மேம்பாட்டிற்கு வழிவகை செய்து வருவது பாராட்டுக்குரியது. அரசின் இந்த முயற்சியினை வரவேற்பதோடு கீழ்கண்ட பரிந்துரைகளை தமிழக அரசுக்கு இந்த ஆய்வு முன் வைக்கின்றது.

விதவைகளின் சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளையும் மற்றும் சமத்துவம், வாழ்வாதாரம், வழிபாடு தொடர்பான உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும். கணவனது இறப்பினைத் தொடர்ந்து நடத்தப்படும் சமூகக் கலாச்சாரச் சடங்குகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் தடை செய்யப்பட வேண்டும். கடன் உதவி வழங்க வேண்டும், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும், தமிழக அரசின் மதுபான கொள்கையில் மறுபரிசீலனை செய்யவேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+