வாக்கிங் சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்.. மதுரையை அதிரவைத்த சிசிடிவி காட்சி
மதுரை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரையில் இன்று காலை ஒரு இளம் பெண் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீடு தொடங்கி பொது இடங்கள் வரை எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெண்கள் வாக்கிங் செல்லக் கூட முடியாத அவலம் நிலவுகிறது.

மதுரை, தபால் தந்தி நகர் தனியார் பள்ளி அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் கூட அணியாமல் அவ்வழியாக வந்த நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பட்டப்பகலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் மதுரை மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் அந்த நபர் அவரின் செயினை பறிக்க வந்தார் என்று தான் நினைத்துள்ளார். ஆனால் அந்த நபர் அவரின் அந்தரங்க பகுதியை தொட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பகலில் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் காவல்துறையை வலியுறுத்தியுள்ளனர்.
அந்த நபர் அங்கு டிவிஎஸ் வாகனத்தில் சென்றுள்ளார். அவரின் வாகன பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சம்மந்தப்பட்ட நபரை காவல்துறை தேடி வருகின்றனர்.
இதேபோல, கடந்த நவம்பர் 4 ஆம் தேதி கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் சைக்கிளிங் மேற்கொண்ட பெண்களிடம் இரண்டு முறை இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கவின் என்ற ஐடி ஊழியரை காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications