தீபாவளிக்கு பெட்ரோல் ஊற்றி பட்டாசு வெடித்து ரீல்ஸ்.. சொந்தக் காசில் சூனியம்! சிக்கிய மதுரை இளைஞர்கள்
மதுரை: மதுரையில் தீபாவளி அன்று அணுகுண்டு பட்டாசுகளை மொத்தமாக கோர்த்து மாலை போல அணிந்து கொண்டும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் அதை இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஆகவும் பதிவிட்டனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
தீபாவளி தினத்தன்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து மக்கள் சிறப்பாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை நாட்களில் சில இளைஞர்கள் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பைக்கில் வீலிங் செய்வது, பட்டாசுகளை ஆபத்தான முறையில் வெடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததையும் காண முடிந்தது.

இன்ஸ்டாவில் அணுகுண்டு மாலையோடு ரீல்ஸ்
அந்த வகையில், மதுரையில் இளைஞர்கள் சிலர் தீபாவளி பட்டாசை மொத்தமாக கட்டி வைத்து வெடித்தும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் ஆபத்தான செயலில் ஈடுபட்டனர். இந்தக் காட்சிகளை தங்கள் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருந்தனர். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோக்கள் வைரலாகின. காண்போரை பதைபதைக்க வைக்கும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் அமைந்திருந்தன.
மதுரை செல்லூர் அருகே வைகை ஆற்று பாலம் பகுதியில் வைத்து இந்த விபரீத செயலில் இளைஞர்கள் ஈடுபட்டனர். பலத்த சத்தத்துடன் வெடிக்கக் கூடிய அணுகுண்டு பட்டாசை மொத்தமாக மாலை போல கோர்த்து, கழுத்தில் அணிந்தபடியும், பிறகு மொத்தமாக வைத்து பெட்ரோல் ஊற்றியும் அழிச்சாட்டியம் செய்தனர்.
இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு..
மேலும், "இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு... பெட்ரோல் களவாணி பயல்களா... அணுகுண்டு பயல்களா" என கூறியபடி வைகை ஆற்று படிக்கட்டில் அந்த அணுகுண்டு பட்டாசை வெடிக்க வைத்தனர். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில், தீபாவளி பட்டாசுகளை வைத்து ஆபத்தான செயலில் ஈடுபட்ட மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ், சந்துரு மற்றும் அரசடி பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இன்ஸ்டா ரீல்ஸுக்காக ஆபத்தான செயலில் ஈடுபட்ட சந்துரு, முத்துமணி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகிறார்கள். இதுபோன்ற செயலில் ஈடுபட்ட மேலும் சிலரையும் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் மற்றொரு சம்பவம்
இதேபோல், மற்றொரு சம்பவமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஈரோடு பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை இணையும் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில், இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தனது பைக்கில் சென்றவாறு முன்பக்கம் ராக்கெட் பட்டாசு வைத்து வெடிக்கச் செய்து தேசிய நெடுஞ்சாலையில் சாகசத்தில் ஈடுபட்டார். நீண்ட நேரமாக அந்த வாலிபர் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடிக்கச் செய்து சாகசத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த நபர் நடுரோட்டில் சாகசம் செய்ததால், அவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் சூழலும் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த காட்சியை அந்த நபரின் நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த ஆபத்தான சாகசத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
இவ்வாறு பொது வெளியில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications