அடுத்தடுத்து 19 விமானங்களுக்கு மிரட்டல்.. பின்னணியில் யார்! என்ன காரணம்? மும்பை போலீஸ் ஷாக் தகவல்
மும்பை: கடந்த இரண்டு நாட்களில் 19 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. அவை போலி மிரட்டல்கள் என்ற போதிலும், பாதுகாப்பு கருதி விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இதற்கிடையே இந்த போலி மிரட்டல்கள் குறித்தும் இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் மும்பை போலீசார் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து என்றால் அது விமான போக்குவரத்து தான். விமானங்களால் ஏற்படும் விபத்துகளும் சரி, உயிரிழப்புகளும் சரி மிக மிகக் குறைவாகவும். இதனால் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறையாக விமானங்கள் கருதப்படுகிறது.

விமானங்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகளே இதற்குக் காரணமாகும். விமானங்களுக்கு மிரட்டல் வந்தால் உடனடியாக அது தரையிறக்கப்பட்டு முழுமையாகச் சோதனை செய்யப்படும்.
போலி மிரட்டல்: பெரும்பாலும் இதுபோன்ற மிரட்டல்கள் போலியானதாகவே இருக்கும். இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டு முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே விமானங்களுக்கு விடுக்கப்படும் இதுபோன்ற போலி மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 19 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி அடுத்தடுத்து விமானங்களுக்குப் போலி மிரட்டல் வந்ததால் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் போலி மிரட்டல் விடுக்கும் நபர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் மும்பை போலீசார் இறங்கியது. இதற்கிடையே பல்வேறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து மைனர் சிறுவன் ஒருவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
பின்னணியில் யார்: போலீசார் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் சில ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அந்த மைனர் சிறுவனுக்கும் அவனது நண்பனுக்கும் பணம் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நண்பரை மாட்டிவிடவே இதுபோல போலியாக மிரட்டல்களைக் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த சிறுவன் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்று போலீசார் தெரிவித்தனர்.
பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்ட அந்த சிறுவன், நண்பனை மாட்டிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. மைனர் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவனது தந்தையிடம் தொடர்ந்து விசாரணை நடத்து வருகிறது.
எதற்காக: தனது நண்பரின் பெயரில் போலியாக ட்விட்டர் பக்கத்தை உருவாக்கி அதில் இருந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளான். கடந்த திங்கள்கிழமை 4 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு குறைந்தபட்சம் 19 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். அந்த சிறுவன் திங்கள்கிழமை 3 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளான். செவ்வாய்க்கிழமை ஏழு விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் 5க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிறுவனங்கள்: இதுபோன்ற மிரட்டல்களால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே விமானங்களை இயக்க வேண்டும். இதனால் தங்களுக்குக் கூடுதலாகச் செலவாகும் என்ற போதிலும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி உள்ளதால் வேறு ஆப்ஷன் இல்லை என்று விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications